தன்னுடைய கணவரை சேர்த்து வைக்கக்கோரி சின்னத்திரை நடிகை தீபா குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


அன்பே சிவம், அத்திப்பூக்கள், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் தீபா. இவர் கடந்தாண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும்  பாக்கியலட்சுமி சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றிய சாய் கணேஷ் பாபுவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 


முதல் கணவரை பிரிந்த தீபா சிறுவயது மகன் இருந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்தது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. ஆனால் சமீபகாலமாக இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தீபாவும், சாய் கணேஷ் பாபுவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தீபா தன்னுடைய மகனுடன் வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே தன் கணவர் சாய் கணேஷ் பாபுவுடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தீபா மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் பாபுவுக்கு தனக்கு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பெரியார் திடலில் வைத்து சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. அது முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. 


திருமணமான தொடக்கத்தில் தன் மீது அன்பாக இருந்த சாய் கணேஷ் பாபு, பின்னர் காரணமின்றி அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டார். அதேசமயம் கணேஷ் பாபு குடும்பத்தினர் தன்னை மிக மோசமாக, ஒரு மனிதராக கூட மதிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். 






தான் கர்ப்பமாக இருந்தபோது வைட்டமின் மாத்திரை என கூறி ஒரு மாத்திரை கொடுத்தார். அதை சாப்பிட்ட பிறகு கருக்கலைப்பு ஏற்பட்டது. கணேஷ் பாபு சண்டையிட்டு தன்னை தாக்கியதாகவும், அதில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தீபா தெரிவித்துள்ளார். மேலும் சாய் கணேஷ் பாபுவின் சகோதரர் ரமண கிரிவாசன் தொடர்ந்து மன ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தல் கொடுத்து வந்தார். கணேஷ் பாபுவின் குடும்பத்தினர் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தினர். கணவர் என்னுடன் வாழ விரும்புவதால் தன்னை சேர்த்து வைக்க வேண்டுமென மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது