ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக உள்ள அண்ணா சீரியலில் நடிக்க நடிகர் மிர்ச்சி செந்தில் ஒருவாரம் விரதம் இருந்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து பல புதுவித சீரியல்கள் ஒளிபரப்பாகவுள்ளது. ஏற்கனவே பல சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், புதிய சீரியல்களும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் “அண்ணா” என்ற சீரியல் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. 


இந்த சீரியலில் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான  மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த சீரியலில் சண்முகம் என்ற கேரக்டரில் இவர் நடிக்க உள்ளார். இந்த சீரியல் குறித்த ப்ரோமோ வீடியோக்கள் முன்னதாக இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 


குறிப்பாக இந்த சீரியலின் முதல் ப்ரோமோ வீடியோவில் செந்தில் உடல் முழுவதும் வேல் குத்தி ஆக்ரோஷமாக சாமியாடியது ரசிகர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.  இந்த நிலையில் இந்த காட்சிக்காக செந்தில் ஒரு வாரம் விரதம் இருந்த விஷயங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இந்த சீரியலுக்கான போட்டோஷூட் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டோ ஷூட்டுக்காவும் அவர் மூன்று நாட்கள் விரதம் இருந்துள்ளார். 


நிஜ வாழ்க்கையில் தீவிர முருக பக்தரான செந்தில்,  இந்த சீரியலிலும் முருக பக்தர் என்பதால் விரதம் இருந்து சீரியலுக்கான வேலைகளை தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மிர்ச்சி செந்தில் 


ரேடியோ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த செந்தில், முதலில் மதுரை என்ற சீரியலில் நடித்திருந்தாலும்,  சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானார். தொடர்ந்து அந்த சீரியலின் ஹீரோயின் ஸ்ரீஜாவை காதல் திருமணமும் செய்துக் கொண்டார். தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த செந்தில் கடைசியாக நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்தார்.  இதற்கிடையில் வெண்ணிலா வீடு, தவமாய் தவமிருந்து, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,கண் பேசும் வார்த்தைகள் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.