சின்னத்திரையில் இன்று ஒரே நாளில் 4 புதிய சீரியல்கள் தங்கள் ஒளிபரப்பை தொடங்கவுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
பொதுவாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த சீரியல்களை புதிதாக ஒளிபரப்பு செய்தாலோ அல்லது மறு ஒளிபரப்பு செய்தாலோ டிவி முன்பு உட்கார்ந்து பார்ப்பவர்கள் அதிகம். கொரோனா காலக்கட்டத்தில் டிவி தொடர்களின் படப்பிடிப்புகள் முடங்கிய நிலையில் பழைய சீரியல்கள் மறுஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் டிஆர்பி ரேட்டிங் வழக்கமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பியை விட எகிறியது.
இப்படியான நிலையில் முந்தைய காலக்கட்டத்தைப் போல சீரியல்கள் எல்லாம் பல ஆண்டுகள் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. அதிகப்பட்சம் 3 ஆண்டுகள் தாக்குப்பிடிப்பதே பெரிய கதையாக உள்ளது. இப்படியான நிலையில் இன்று ஒரே நாளில் 4 புதிய சீரியல்கள் தங்கள் ஒளிபரப்பை தொடங்கவுள்ளது. அதனைப் பற்றி நாம் காணலாம்.
நினைத்தேன் வந்தாய்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நினைத்தேன் வந்தாய்’ என்ற சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாக நடிக்க, கீர்த்தனா பொட்வால் கணேஷின் முதல் மனைவியாக வருகிறார். அவர் இறந்து விட்ட நிலையில் தனது 4 குழந்தைகளான கனிஷ்கா, கௌஷிக், யுக்தா, ஷாபா ஆகியோரை கணேஷ் வளர்க்க தடுமாறுகிறார். இதனால் அங்கு வரும் ஜாஸ்மின் இந்த குழந்தைகளுக்கு தாயாக மாறுவாரா? என்பதே இந்த சீரியலின் கதையாகும்.
சின்ன மருமகள்
விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் “சின்ன மருமகள்”. பள்ளியில் படிக்கும் மாணவி தமிழ் செல்வியின் கனவை உடைத்து அவளுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவெடுக்கிறார்கள். திருமணம் நடப்பதற்கு சில மணி நேரம் முன்பு போலீஸூக்கு போன் செய்து மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் திருமணம் நின்று போன நிலையில், தமிழ் செல்வியின் படிக்கும் கனவு பலித்ததா? இல்லை இல்வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டாரா? என்ற ரீதியில் இந்த சீரியல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நவீன் குமார், ஏஒய்கே சுந்தர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தங்க மகள்
இதே விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் “தங்க மகள்”. இதில் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் யுவன், அஸ்வினி, தலைவாசல் விஜய், வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதில் விபத்தில் இறந்த தலைவாசல் விஜய் மகள்களுக்கும், விபத்தை நிகழ்த்திய வினோதினி மகளுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் கதையாகும்.
கௌரி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தொடர்ந்து நடிகை சுஜிதா கலைஞர் டிவிக்கு மாறியுள்ளார். அடுத்ததாக அவர் நடிப்பில் “கௌரி” என்ற சீரியல் ஒளிபரப்பாகிறது. கடவுள் மற்றும் தீய சக்திக்கு இடையே நடக்கும் கதைக்களமாக இந்த சீரியல் உருவாகியுள்ளது. இந்த சீரியலில் சுஜிதா அம்மனாக நடிக்கிறார். கௌரி சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.