என் கணவர் அரவிந்த் இல்லை என்ற உணர்வு எனக்கு இல்லை, அவருடன் நான் உணர்வுப்பூர்வமாக தொடர்பில் இருக்கிறேன் என சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முக பிரியா தெரிவித்துள்ளார்.
சன் டிவியில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான மெகாத் தொடர் ‘நாதஸ்வரம்’. இயக்குநர் ‘மெட்டி ஒலி’ திருமுருகன் இயக்கிய இந்த தொடர் சின்னத்திரை ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் பல புதுமுகங்கள் நடித்து மக்களிடையே பிரபலமாகினர். அப்படி ‘நாதஸ்வரம்’ சீரியலில் நடித்ததன் மூலமாக நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவும் பிரபலமடைந்தார். இவருக்கு அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஸ்ருதி, அடிக்கடி தன் கணவருடன் எடுத்த ரீல்ஸ்களை பதிவிடுவது வழக்கமாக கொண்டிருந்தார். இப்படி இவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஸ்ருதியின் கணவர் அரவிந்த் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பிட்னெஸ் விஷயத்தில் ஆர்வம் கொண்ட அரவிந்த் அதீத உடற்பயிற்சி காரணமாக தான் இறந்தார் என்றெல்லாம் வதந்திகள் பரவ தொடங்கியது. இதனை மறுத்து ஸ்ருதி வீடியோவும் வெளியிட்டார்.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தன் கணவர் அரவிந்த் குறித்த பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், “நீண்ட இடைவெளிக்குப் பின், என் கணவரின் மரணத்துக்குப் பின் நான் ஒரு நேர்காணலில் பங்கேற்றுள்ளேன். நான் என் கணவர் அரவிந்த் இல்லை என நினைக்கவே இல்லை. என்னை சுற்றியவர்களுக்கு நான் எப்படி இருக்கிறேன் என்பது தெரியும். அரவிந்த் மேல் இருக்கும் காதல் அப்ப இருந்ததை விட இப்ப அதிகமாகவே உள்ளது. நான் எங்கு சென்றாலும் அவர் என்னுடன் இருப்பதாகவே உணர்கிறேன்.
அரவிந்தின் கடைசி தருணங்களை நிறைய பேர் ஆய்வு செய்தார்கள். அது ரொம்ப கடினமாக இருந்தது. அவரின் மரணத்துக்கு என்ன காரணம் என தெரிந்து என்ன நடக்கப்போகிறது. அப்ப நான் ரொம்ப மோசமான மனநிலையில் இருந்தேன். ஆனால் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து அரவிந்த் இறந்து விட்டதாக வதந்தி பரவிய நிலையில் நான் இரண்டாவது நாளே அப்படி ஒரு வீடியோவை பதிவிட்டேன். அதன்பிறகு எங்கேயும் நான் வீடியோ பதிவிடவில்லை. அந்த வீடியோவில் கூட வதந்திகளை பரப்பாதீர்கள் என கூறி விட்டேன். அவரவர்கள் உங்கள் உடல்நலனை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு நெகட்டிவ் விஷயங்களை பப்ளிசிட்டிக்காகவோ, பணத்துக்காக பண்ணாதீர்கள். அது தவறான விஷயம். அதற்கு பதில் கஷ்டத்தில் இருப்பவர்களுடன் ஆறுதலாக இருங்கள்.
நான் அரவிந்துடன் உணர்வு ரீதியாக தொடர்பில் இருப்பதாகவே உணர்கிறேன். அதனால் அவர் இல்லை என்பதை நான் நினைக்கவில்லை. இதனைத் தவிர நான் ரொம்ப ஸ்ட்ராங்காக மாற யோகா, புத்தகம் படிப்பது, பயணம் செய்வது என பல நிகழ்வுகள் அந்த நேரத்தில் எனக்கு மிகவும் உதவியது. நான் அரவிந்த் இருக்கிறார் என்ற பாசிட்டிவ் எண்ணத்துடன் இருக்கும்போது நிறைய பேர் எனக்கு தனிப்பட்ட முறையில் மெசெஜ் செய்வார்கள்.
நாங்களும் இதே நிலையில் தான் இருக்கிறோம். எப்படி கையாள்கிறீர்கள் என கேட்பார்கள். எனக்கு அழுகை எல்லாம் வரும். ஆனால் அதனை எல்லாம் வெளியே காட்ட எனக்கு விருப்பமில்லை. ஒரு இரவு அரவிந்தின் புகைப்படம் பார்த்து அழுவேன். மத்த நேரம் நம்மை ஒரு ரோல் மாடலாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சப்போர்ட் ஆக இருக்க நினைக்கிறேன். அது நிறைய பேருக்கு உதவியும் செய்துள்ளது. ஆனால் இந்த வலியில் இருந்து தப்பிக்க முடியாது” என ஸ்ருதி ஷண்முக பிரியா தெரிவித்துள்ளார்.