குழந்தை நட்சத்திரங்களாக ஜொலித்த பலருக்கும் பெரியவர்கள் ஆன பிறகு வாய்ப்புகள் அந்த அளவிற்கு கிடைப்பதில்லை. அப்படி குழந்தை நட்சத்திரமாக சுட்டி பெண்ணாக பிரபுதேவாவுடன் 'அள்ளித்தந்த வானம்' 'ஜெயம்' படத்தில் சதாவின் தங்கையாக நடித்த கல்யாணி தனது துறுதுறுப்பான நடிப்பாலும் சுட்டி தனமான பேச்சாலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். 


சின்னத்திரையில் கல்யாணி:


பலரும் ரசித்த இந்த சுட்டி பெண் வளர்ந்த  பிறகு பல சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம், ஆண்டாள் அழகர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்து கொண்ட கல்யாணி குழந்தை, குடும்பம் என முழுமையாக அதில் கவனம் செலுத்தி வந்தார்.   


 



ரீ என்ட்ரிக்கு பிறகு :


இடையில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் ரீ என்ட்ரி கொடுத்த கல்யாணியை அதற்கு பிறகு பல மாதங்களாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பார்க்க முடியாமல் போனது. ரசிகர்கள் அவரை பற்றி எந்த விவரமும் தெரியாமல் இருந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் மூலம் அதிர்ச்சியான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை:


கல்யாணியின் இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் உடல் அளவிலும் மன அளவிலும் மிகவும் சோர்வாக இருப்பதாக கூறியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை தேறிய கல்யாணிக்கு நவ்யா என்ற பெண் குழந்தை ஒன்று பிறந்தது. எல்லாம் நன்றாக போய்க்கொண்டு இருந்த சமயத்தில் திடீரென கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மீண்டும் அதே பிரச்சினை தலை தூக்க ஆரம்பித்துள்ளது.


மருத்துவர் கொடுத்த ஷாக் :


மருத்துவரை அணுகி அவரிடம் கேட்க கூடாத கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். முன்னர் நடைபெற்ற அறுவை சிகிச்சை பலனளிக்காததால் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை மூலம் ஏற்கனவே பொருத்தப்பட்ட பிளேட், ஸ்க்ரூக்களை நீக்கி புதிய எலும்பை பொருத்தவேண்டும் என கூறியுள்ளார் மருத்துவர். இந்த முறை கல்யாணி  குணமடைய பல நாட்கள் எடுத்து கொள்ளும் என கூறியுள்ளார். 


 



பக்கபலமாக குடும்பம் : 


கல்யாணியின் இந்த நிலை பற்றி உருக்கமான போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் " எனக்கு உறுதுணையாக கணவரும் 5  வயது மகள் நவ்யாவும் தான் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் காட்டும் பாசத்தை நம்பமுடியவில்லை. நான் எனது குடும்பத்திற்கு கடன்பட்டு இருக்கிறேன்" என நீளமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். 


வதந்திகளை நம்ப வேண்டாம் : 


"பலரும் தவறான தகவலை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அது உண்மையல்ல. நான் இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு மனதளவில் என்னை தயார் செய்து வருகிறேன்" என பின்குறிப்பு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். 
 
கல்யாணி விரைவில் குணமடைய வேண்டும் என அவரின் ரசிகர்கள் கமெண்ட் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.