நடிகை தனுஸ்ரீ தத்தா இன்று காலை சமூக ஊடகங்களில் சில திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்துள்ளார். ஆஷிக் பனாயா ஆப்னே படத்தின் நடிகையான தத்தா, பிரபல நடிகர் நானா படேகர் மற்றும் பாலிவுட் மாஃபியா தன்னை துன்புறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
திரைப்படத்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள் தன் மீது பொய்யான செய்திகளை பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தத்தா கூறுகையில், தனக்கு ஏதேனும் நேர்ந்தால், metoo விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நானா படேகர் மற்றும் பாலிவுட் மாஃபியாதான் அதற்கு காரணம். தனுக்கு எதிராக நடத்தப்படும் அவதூறு பிரச்சாரங்களுக்கு பின்னணியில் அவர்கள் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சுஷாந்த் சிங் மரணத்தின் போது அந்த விவகாரத்தில் இவர்களின் பெயர் அடிபட்டதாகவும் இவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் நாட்டு மக்களை தத்தா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக எழுதியுள்ள அவர், "எனக்கு ஏதேனும் நேர்ந்தால், #metoo விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நானா படேகர் மற்றும் அவரது பாலிவுட் மாஃபியா நண்பர்கள் பொறுப்பு என்பதைத் தெரியப்படுத்தி கொள்கிறேன். இந்த பாலிவுட் மாஃபியா யார்?? எஸ்.எஸ்.ஆர்(சுஷாந்த் சிங்) மரண வழக்கில் அடிக்கடி அடிபட்ட வந்த அதே நபர்கள்.
அவர்களின் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள். அவற்றை முற்றிலுமாகப் புறக்கணித்து, கொடூரமான பழிவாங்கும் நோக்கத்துடன் அவர்கள் கண்காணிக்கபட வேண்டும். என்னைப் பற்றி போலிச் செய்திகளைப் பரப்பும் அனைத்து திரைத்துறையினரையும் பத்திரிகையாளர்களையும் என் மீது மோசமான அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்ட மக்கள் தொடர்பாளர்களையும் பிடிக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
மேலும், சட்டமும் நீதியும் தன்னைத் தோற்கடித்திருக்கலாம் என்றும் ஆனால் இந்த தேசத்தின் மக்கள் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெய் ஹிந்த் என பதிவிட்டு தனது பதிவை முடித்து கொண்டுள்ளார்.
தத்தா, தனது சமூக தளங்களில் சில அதிர்ச்சியூட்டும் கருத்துகளை வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த பதிவை வெளியிட்டுள்ளார். தான் குறிவைக்கப்பட்டு மிக மோசமாக துன்புறுத்தப்பட்டதாகவும் தனது வாகன பிரேக்குகள் இரண்டு முறை சேதப்படுத்தப்பட்டதாகவும் அவர் சில நாள்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார்.
தனது குடிப்பழக்கத்தை அதிகரிக்க தனது வீட்டில் ஒரு பணிப்பெண் பணியமர்த்தப்பட்டதாகவும் இது தனது மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார். என்ன நடந்தாலும், கொடுமைப்படுத்துதலுக்கு அடிபணிந்து தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்