மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேருல் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 


வேலூரில் கலைவாணி என்ற இயற்பெயரோடு பிறந்த வாணி ஜெயராம் முறைப்படி கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டு 1971 ஆம் ஆண்டு குட்டி என்ற இந்தி படத்தில் பாடகியான அறிமுகமானார். தமிழில் தாயும் சேயும் படத்தில்  முதல் பாடலை பாடிய வாணி ஜெயராமுக்கு 1974 ஆம் ஆண்டு தீர்க்க சுமங்கலி படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல் திருப்புமுனையாக அமைந்தது. 






இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை  பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.


மேலும் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து  ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் வாணி ஜெயராம் மறைவுக்கு என்ன காரணம் என்ற உண்மை தெரிய வரும்.






இதனிடையே வாணி மறைவுக்கு திரையுலக, அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என இந்தியா முழுவதுமிருந்து இரங்கல் பதிவுகள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.