கேரளாவில் கடை திறப்பு விழா ஒன்றுக்கு சென்ற நடிகை ஹனிரோஸ் மீது ரசிகர்கள் விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


எந்த துறையில் பிரபலமானாலும் அவர்களை அழைத்து தங்கள் தொழில் நிறுவனங்கள், இல்ல நிகழ்ச்சிகளை நடத்திப் பார்க்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கும். பிரபலங்கள் வரும் தகவலை அறிந்து அந்தந்த இடங்களில் கூடும் கூட்டத்தால் போக்குவரத்திற்கு இடையூறு என பல பிரச்சினைகள் உண்டாகும். ஆனால் நடிகை ஹனிரோஸ்  கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடந்ததே வேறு. 


தமிழில்  முதல் கனவே,  சிங்கம்புலி  ,  மல்லுக்கட்டு ,  கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹனிரோஸ். மலையாளத் திரையுலகைச் சேர்ந்த அவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த வீரசிம்ம ரெட்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் ஆந்திராவில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக ஹனிரோஸ் மாறியுள்ளார். இந்த படத்தின் வெற்றி விழாவில் பாலகிருஷ்ணாவுடன் எடுத்த புகைப்படங்கள் வைரலானது.  






இதனிடையே  கேரள மாநிலம் மன்னார்காட்டில் மைஸி ஃபியூச்சர் என்ற புதிய வீட்டு உபயோகப் பொருட்கள் கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஹனிரோஸ் கலந்து கொள்ளச் சென்றார். அவர் வருவதையறிந்த பொதுமக்கள் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து கடை இருக்கும் இடத்திற்கு திரண்டனர். ஹனிரோஸை பார்க்க வந்த கூட்டத்தை பார்த்த பவுன்சர்களும் போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். 


இதற்கிடையில் கடையை திறந்துவிட்டு ஹனிரோஸ், காரில் ஏறுவதற்கு கிளம்பினார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் செல்ஃபி எடுக்க அவரை சூழ்ந்து கொண்டனர். இதனால் போலீசார் மற்றும் பவுன்சர்கள்  ரசிகர்களை தடுக்க முயன்றனர். இதில் சிலர் ஹனிரோஸ் மீது விழுந்தனர். ஆனால் ஒருவழியாக அவர் பவுன்சர்களின் உதவியுடன் காரில் ஏறி சென்றார். இந்நிலையில் கடை திறப்பு விழா வீடியோவை ஹனிரோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


ரசிகர்கள் அருகில் நிற்கும் போது கோபமாகப் பார்க்கும் ஹீரோயின்கள் போல் அல்லாமல், ஹனிரோஸ் சிரித்து விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறிய சம்பவத்தை இணையவாசிகள் பாராட்டியுள்ளனர்.