தமிழ், தெலுங்கு திரையுலகின் பிரபல மற்றும் மூத்த நடிகர் சரத்பாபு. 71 வயதான அவர் இன்று ஹைதரபாத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


சரத்பாபு காலமானார்:


 பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஹைதரபாத்தில் இன்று (22.05.2023) காலமானார். 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்:


நடிகர் சரத்பாபு மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தென்னிந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வலம் வந்த நடிகர் சரத்பாபு மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.


மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல்:


நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பதிவில்,” சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது.  அவருக்கு என் அஞ்சலி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.


தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்


ஆந்திராவைச் சேர்ந்த சரத் பாபு, 1951ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். 1973-ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். 1977ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய பட்டினப் பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து, பாபா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார். ஒரு புறம்  கதாநாயகனாகவும் மற்றொரு புறம் ரஜினி, கமல் இருவருடனும் பல படங்களில் நடித்தும் தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்றார். 


தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் சரத்பாபு 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பாக செய்யும் திறமை கொண்டவர் சரத் பாபு.




மேலும் வாசிக்க.


Sarath Babu: 'முள்ளும் மலரும் முதல் பாபா வரை..' ரஜினிகாந்தின் ரீல் மற்றும் ரியல் நண்பர்..! மறக்க முடியுமா அந்த படங்களை?