தஞ்சாவூர்: மது அருந்தி இருவர் உயிரிழந்ததற்கு சயனைடு காரணம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் நேற்று விற்கப்பட்ட கள்ள மதுபானத்தை அருந்திய கீழவாசலை சேர்ந்த குப்புசாமி, விவேக் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினர் 174 என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து மதுக்கூட உரிமையாளரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவருமான செந்தில் நா. பழனிவேல், மதுக்கூட ஊழியர் காமராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், மதுக்கூடத்துக்கு மதுபானம் எப்படி வந்தது என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே இச்சம்பவம் நிகழ்ந்த டாஸ்மாக் மதுக்கடைக்கும், மதுக்கூடத்துக்கும் கோட்டாட்சியர் (பொறுப்பு) கோ. பழனிவேல், கலால் வட்டாட்சியர் ஆர். தங்க பிரபாகரன், காவல் நிலைய ஆய்வாளர் வி. சந்திரா உள்ளிட்டோர் முன்னிலையில் நேற்று இரவு சீல் வைக்கப்பட்டது.
இதனிடையே, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குப்புசாமி, விவேக்கின் உடற்கூறாய்வுகள் ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைந்தன. ஆனால், சடலங்களை வாங்க குப்புசாமி, விவேக்கின் உறவினர்கள் மறுத்துவிட்டனர். இருவரது குடும்பத்துக்கும் தலா ரூ. 20 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும், இக்கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே சடலங்களை வாங்கிச் செல்வோம் எனவும் உறவினர்கள் கூறிவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் மது அருந்தி இருவர் உயிரிழந்ததற்கு சயனைடு காரணம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து மாவட்ட் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:
தஞ்சாவூரில் மது அருந்தி குப்புசாமி, விவேக் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். மேலும் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதையடுத்து இருவரது உடல்களிலும் இருந்த வயிற்றுப் பகுதி, கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை எடுக்கப்பட்டு, தஞ்சாவூர் மண்டல தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இந்த ஆய்வறிக்கையில் மெத்தனால் ஆல்கஹால் இல்லை என்பதும், சயனைடு விஷம் இருந்ததும் தெரிய வந்தது.
உயிரிழந்த விவேக்குக்கு குடும்ப பிரச்னை காரணமாக அவர் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த விசாரணையின் முடிவில் முழு விவரமும் தெரியவரும். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உடனிருந்தார்.