Swarnalatha: தனது காந்தக்குரலால் 23 ஆண்டுகளாக பல்வேறு பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்த ஸ்வணலதா மறைந்து இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


சிலரின் கலைப்பயணம் அவர்களின் மறைவுகு பிறகும் என்றென்றும் பேசப்படும். அந்த வகையில் சில ஆண்டுகளே வாழ்ந்து இருந்தாலும், தன்னை மறைக்காத அளவுக்கு பல அற்புதமாக சாதனையை படைத்து விட்டு, தனது குரலால் இறந்தும் வாழ்ந்து வருகிறார் ஸ்வரங்களின் அரசி என அழைக்கப்படும் ஸ்வர்ணலதா. 


கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் 3 வயதில் இருந்தே பாடத்தொடங்கியுள்ளார். சிறந்த பாடகராக வேண்டும் என்ற ஆசையுடன் சென்னைக்கு வந்த ஸ்வர்ணலதா முதலில் சந்தித்தது மெல்லிசை மன்னன் எம்.எஸ். விஸ்வநாதனை தான். முதல் சந்திப்பிலேயே ஸ்வர்ணலதாவின் திறமையை பார்த்த எம்.எஸ்.வி. நீதிக்கு தண்டனை படத்தில் இடம்பெற்றிருந்த மகாகவி பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடலை பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். முதல் பாடலே பாரதியின் பாடலாக இருந்ததால் ஸ்வணலதா அழகாக பாடியுள்ளார். 


அடுத்தடுத்து இசைஞானி இளையராஜா, சங்கர்- கணேஷ், கங்கை அமரன் இசையில் பாடி வந்த ஸ்வர்ண லதாவின் அலை இளையராஜாவின் இசையில் வெளிவந்த ‘மாலையில் யாரோ மனதோடு பேச’ பாடலால் அனைவராலும் ரசிக்க வைத்தது. சின்னத்தம்பியில் ‘ போவோமா ஊர்கோலம்’ படல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. 


கேப்டன் பிரகாரன் படத்தில் இடம்பெற்ற ‘ ஆட்டமா தேரோட்டமா’ பாடல் ஒவ்வொருவரையும் தாளம் போட வைத்தது. தர்மதுரை படத்தின் ’மாசிமாசம் ஆளான பொண்ணு’ பாடல் அவரை முன்னணி பாடகராக மாற்றியது.


மூத்த இசையமைப்பாளர்கள் வரிசையை தொடர்ந்து இசையில் அதிரடி காட்டிய ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஸ்வரணலதா குரல் புதிய மாயை செய்தது. ஜென்டிமேன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த ‘உசிலம்பட்டி பெண்குட்டி’, பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் இடம்பெற்றிருந்த ‘போராளே பொன்னுத்தாயி’ பாடலும், முக்காகா முக்காபுலா, அக்காடா நாங்க எடை போட்டா, குச்சி குச்சி ராக்கம்மா, உளுந்து விதைக்கையிலே, ஒரு பொய்யாவது சொல் கண்ணே, எவனோ ஒருவன் வாசிக்கிறான், பூங்காற்றிலே, என்னுள்ளே என்னுள்ளே உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களின் இதயத்தில் ரிப்பீட் மோடில் ஒலிக்க செய்து கொண்டிருப்பவை. 


பல்வேறு மாநில விருதுகளை பெற்ற ஸ்வர்ணலதா கருத்தம்மா படத்தில் ‘போராளே பொன்னுத்தாயி’ பாடலை பாடியதற்காக தேசிய விருதை வென்றார். தமிழ் திரையுலகில் இசையின் மும்மூர்த்திகளாக பார்க்கப்படும் எம்.எஸ். வி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் இசைக்கு ஸ்வர்ணலதாவின் குரல்கள் அப்படியே பொருந்தியது. இவர்கள் மட்டுமின்றி யுவர் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் இசையிலும் ஸ்வர்ணலதாவின் குரல்கள் ஒலிக்க தவறவில்லை. 


மென்மை, சோகம், காதல், உற்சாகம் என பல்வேறு உணர்வுகளுக்கு ஏற்ப கச்சிதமான குரல் வளத்தை வெளிப்படுத்திய ஸ்வர்ணலதாவின் கடைசி பாடலாக பீமா படத்தில் இடம்பெற்றிருந்த ரங்கு ரங்கம்மா பாடல் அமைந்தது. 2010ம் ஆண்டு இதே நாளில் உடல்நல குறைவால் கலை உலகை விட்டும், ரசிகர்களை விட்டும் மறைந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்க மொழி என 7 ஆயிரத்தும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள ஸ்வர்ணலதா மறைந்தும் இசையால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.