தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சார்பில் “கலைஞர் 100” (Kalaingar 100) நிகழ்ச்சி இன்று மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.
கலைஞர் நூற்றாண்டு விழா
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வரை ஆண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் திரையுலகம் சார்பிலும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதி செய்த மிகப்பெரிய பங்களிப்பை போற்றும் விதமாக “கலைஞர் 100” விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
கலைஞர் 100 விழா
இதற்கான ஒப்புதலும் பெறப்பட்டு முதலில் சென்னை சேப்பாக்கம் மைதனாத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கியது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கலைஞர் 100 விழா ஜனவரி 6 ஆம் தேதி நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் கலைஞர் 100 விழா ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. மறுபக்கம் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணியும் தீவிரமாக நடந்தது. கலைஞர் 100 விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் சென்று தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராம நாராயணன், பொதுச்செயலாளர் பைவ் ஸ்டார் கதிரேசன், இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோர் அழைப்பிதழ் வழங்கினர்.
மேலும் இந்த விழாவில் திரையுலகம் சார்பில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்கின்றனர். அவர்களுக்கும் நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் கலைஞர் 100 விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. முதலமைச்சர் வருகை தரவுள்ளதால் நிகழ்ச்சி நடக்கும் இடத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Vijayakanth: ”பல நாள் விஜயகாந்த் போட்ட சாப்பாடுதான் பசியை போக்கியது” - நடிகர் சென்ராயன் உருக்கம்