குடும்ப படங்களை இயக்குவதில் சிறந்தவரான வி.சேகர் இயக்கத்தில் உருவான ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ படம் வெளியாகி இன்றோடு 23 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’


வி.சேகர் இயக்கிய இந்த படத்தில் நாசர் , கரண் , குஷ்பு , ரோஜா , வடிவேலு , விவேக், விஜயகுமார், தியாகு மற்றும் கோவை சரளா என பலரும் நடித்திருந்தனர். தேவா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 


படத்தின் கதை 


நாசர் அவரின் மனைவி குஷ்பூ, குழந்தைகள்,  முதல் தம்பியாக வடிவேலு அவரது மனைவி கோவை சரளா, நாசரின் 2வது தம்பி கரண் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றனர். நாசர் வேலை செய்யும் கம்பெனியின் முதலாளியான விஜயகுமார் தன் மகள் ரோஜாவை அந்தஸ்து பார்க்காமல் கரணுக்கு திருமணம் செய்து வைக்கிறார். பணக்காரராக இருந்தாலும் ரோஜா குடும்பத்தில் ஒன்ற நினைக்கும் நிலையில், கரணின் செயல்கள் மாறுகிறது. இதில் ஏற்படும் பிரச்சினையில் கரண் தனியாக செல்கிறார். 


அதேசமயம் மகள் குஷ்பூவை பக்கத்து வீட்டில் வசிக்கும் விவேக்கிற்கு திருமணம் செய்து கொடுக்க பெண்கள் முடிவு செய்த நிலையில், நாசர் மற்றும் வடிவேலு இடையே மோதல் ஏற்பட குடும்பம் சிதறுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைத்ததா? கூடி வாழ்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இப்பிரச்சினை பேசியது. 


காமெடி கலாட்டா


படம் முழுக்க முழுக்க காமெடி காட்சிகளுடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தால் டிவியில் இன்று ஒளிபரப்பினாலும் இந்த படத்தை பார்ப்பவர்கள் அதிகம். பாக்ஸர் கிருஷ்ணனான, அரசியல்வாதியாக நடித்த வடிவேலு மாஸ் காட்டியிருப்பார்.  


தேவா இசையில் முத்துலிங்கம் , காளிதாசன், காமகொடியன் மற்றும் பழனி பாரதி எழுதிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. நடுத்தர வர்க்க மக்களை மனதில் வைத்து கதையமைத்து வெற்றி கண்ட இயக்குநர்கள் பலரும் இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத இடத்தில் உள்ளனர். அதில் வி.சேகரும் ஒருவர் என்பதே உண்மை.