நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.


லியோ கூட்டணி 


மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணி 2வது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார். இதன் மூலம் விஜய் - த்ரிஷா ஜோடி 15 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ளனர். மேலும் சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 


லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாகும் என டைட்டில் வெளியானபோதே அறிவிக்கப்பட்டது. அதற்கேற்றாற்போல் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. அதேசமயம் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டு வருவதால் லியோ படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 


அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்டுகள் 


லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. தொடர்ந்து மறுநாள் 2வது லுக் போஸ்டர் வெளியானது. அன்று மாலை படத்தில் இடம் பெற்ற ‘நா ரெடி’ பாடல் வெளியானது. விஜய் பாடிய இந்த பாடல் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. யூட்யூப் ட்ரெண்டிங்கில் இருக்கும் அந்த பாடலின் வரிகள் விஜய் அரசியல் வருகைக்கான அறிகுறி என சொல்லப்பட்டது. 


இதனிடையே சில தினங்களுக்கு முன் லியோ படத்தில் விஜய் தொடர்பான காட்சிகள் நிறைவடைந்து விட்டதாக புகைப்படத்துடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அதில், “விஜய்யின் காட்சிகள் நிறைவடைந்தன.  இந்த இரண்டாவது பயணத்தை மீண்டும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி!” என லோகேஷ் கூறியிருந்தார். 


இந்நிலையில் லியோ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக படக்குழுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், “லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. 6 மாதங்களில் கிட்டதட்ட 125 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படத்தில் தங்களை இணைத்துக் கொண்ட நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி! இந்தப் பயணம் மீண்டும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்தது! உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் பாய்ஸ்!” என தெரிவித்துள்ளார்.