இளைய தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் ரிலீஸாக தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள திரைப்படம் 'வாரிசு'. இப்படம் ஆந்திராவில் ரிலீஸாவது குறித்த ஒரு சர்ச்சை சில நாட்களாக வைரலாகி வருகிறது. அது குறித்து இயக்குனர்கள் லிங்குசாமி மற்றும் பேரரசு தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் வேலுதாஸ் இயக்கத்தில் நடிகர் விமல் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் 'துடிக்கும் கரங்கள்'. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள இயக்குனர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் லிங்குசாமி, ரமேஷ் கண்ணா, பேரரசு, எழில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இயக்குனர் லிங்குசாமி :
இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் லிங்குசாமி பேசுகையில் "தென்னிந்திய சினிமாவிற்கு இது ஒரு பொற்காலம். பான் இந்திய படங்களாக அனைத்து மொழிகளிலும் படங்கள் வெளியாவது சினிமாவின் வளர்ச்சியை சுட்டி காட்டுகிறது. இந்த காலகட்டத்தில் தமிழ் படத்தை வெளியிட கூடாது என கூறுவது பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
வாரிசு திரைப்படத்தை ஆந்திராவில் சங்கராந்தி அன்று வெளியிட கூடாது என்பது எப்படி சரியானதாகும். பாகுபலி, ஆர்ஆர்ஆர் என எத்தனையோ திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர். எத்தனையோ தமிழ் படங்கள், ஆந்திராவில் ஹிட்டாகி உள்ளது. குறுகிய எண்ணம் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். இரண்டு தரப்பினரும் கலந்து பேசி இதற்கு முடிவு கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் சினிமா 'வாரிசு'க்கு முன் 'வாரிசு'க்கு பின் என மாறிவிடும். இந்த சலசலப்பு விரைவில் விலகவேண்டும். அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம்" என்றார் இயக்குனர் லிங்குசாமி.
ஆதங்கத்தை கொட்டிய இயக்குனர் பேரரசு :
அவரை தொடர்ந்து அடுத்ததாக பேசிய இயக்குனர் பேரரசு " இங்கு பொங்கல் பண்டிகை என்றால் ஆந்திராவில் சங்கராந்தி. இங்கு வாரிசு தமிழில் வெளியாகும் நேரத்தில் அங்கு தெலுங்கில் ரிலீஸ் ஆகப்போகிறது. தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர், தெலுங்கு பட இயக்குனராக இருந்தாலும் தமிழ் நடிகர் என்பதால் தான் வாரிசு படத்தை கார்னர் செய்கிறார்கள். தமிழர்களும் தமிழ் திரையுலகும் பெருந்தன்மை உடையவர்கள், பெருமைக்குரியவர்கள். பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப், காந்தாரா என மற்ற மொழி படங்களை தமிழ் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
எல்லா மொழி படங்களையும் வேற்றுமை இல்லாமல் வரவேற்பவர்கள் தமிழர்கள். தெலுங்கு படங்களுக்கு தான் சங்கராந்தி அன்று முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்பது தமிழ் சினிமாவை அவமானப்படுத்துவதற்கு சமம். இது சாதாரண பிரச்சனை இல்லை. வாரிசு ஆந்திராவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழி படங்கள் இங்கு வெளியாகாத வகையில் பிரச்சனை பெரிதாகும்" என பேசினார் இயக்குனர் பேரரசு.