நான் அமெரிக்காவுக்கே போனதில்லை, ஆனால் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதாக வதந்தி பரவுவதாக நடிகர் ஜனகராஜ் வேதனை தெரிவித்துள்ளார்
1978ம் ஆண்டு ராதிகா, சுதாகர் நடித்த கிழேக்கே போகும் ரயில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜனகராஜ், கடைசியாக த்ரிஷா விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தில் பள்ளி வாட்ச்மேனாக நடித்திருப்பார். எப்பொழுதுமே பிரபலமான திரைப்பட நடிகர்கள் படங்களில் இருந்து நடிக்காமல் ஒதுங்கி இருந்தால் வதந்திகள் பரவுவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் நடிகர் ஜனகராஜ் பற்றியும் வதந்திகள் பரவின. அவர் அமெரிக்கா சென்று செட்டிலானதால் தமிழ் திரைபப்டங்களில் நடிப்பதில்லை என கூறப்பட்டது.
பாரதிராஜாவின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜனகராஜ், ரஜினி, கமல்ஹாசன் என இரு லெஜெண்டுகளுடன் நடித்து அவர்களுக்கு நண்பரானவர். காமெடியில் எந்த கேரக்டர்களிலும் கலக்கும் இவர் கமலின் நாயகன், விக்ரம், அபூர்வ சகோதரர்கள், குணா படங்களிலும், ரஜினியின் ராஜாதி ராஜா, பணக்காரன், அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இந்த படங்களில் ஜனகராஜின் காமெடி ரொம்பவே பிரபலமானது.
இந்த நிலையில் அண்மையில் ஜனகராஜ் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தனது குடும்பம் பற்றியும், சினிமா பற்றியும் ஜனகராஜ் ஓப்பனாக பேசியுள்ளார். தான் அமெரிக்காவில் செட்டில் ஆகவில்லை என்றும், இதுவரை ஒருமுறை கூட அமெரிக்காவிற்கு சென்றதில்லை என்றும் கூறியுள்ளார். தான் அமெரிக்காவில் செட்டில் ஆனதாக வெளியாகும் செய்திகளால் தனக்கு பட வாய்ப்புகள் கூட வருவதில்லை என்று வருத்தப்பட்டார். தனது குடும்பத்துடன் சென்னையில் தான் வசித்து வருவதாக கூறிய ஜனகராஜ் நல்ல வாய்ப்புகள் கிடைக்காததால் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றார். தனக்கு நல்ல கேரக்டர் கொடுத்தால் கட்டாயம் நடிப்பேன் என்ற ஜனகராஜ், தன்னை பற்றிய வதந்திகள் வருத்தம் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டும் இல்லாமல் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், ரஜினி வந்து பார்த்ததாகவும் சிலர் வேண்டுமென தவறான தகவல்களை எழுதி மனதை காயப்படுத்துவதாகவும் ஜனகராஜ் குறிப்பிட்டுள்ளார். இப்படிப்பட்ட தவறான செய்தியால் தன்னை பலர் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரிப்பதாகவும், உடம்புக்கு என்ன ஆச்சு என கேட்பதாகவும் கூறியுள்ள ஜனகராஜ், எத்தனை பேருக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பது என்றார். மேலும் கொரோனா காலத்தில் அதிகமாக மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், பத்திரிகைகளில் தன்னை பற்றி வரும் தவறான செய்திகள் வேதனை அளிப்பதாகவும் ஜனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.
மனைவி தன்னை நன்றாக கவனித்து கொள்வதாகவும், தனக்கு ஒரே ஒரு மகன் என்றும், அவரும் ஜோஹோவில் வேலை பார்ப்பதாகவும் ஜனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் நேரம் கிடைக்கும்போது சினிமா நண்பர்களிடம் தொலைபேசியில் பேசுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Actor Senthil family: மருத்துவராக, ஏழைகளுக்கு சேவை செய்யும் நடிகர் செந்தில் மகன்