பிரபல காமெடி நடிகர் பால சரவணன் தன் உடல் எடையை வெகுவாக குறைத்து தனது புதிய லுக்கை அதிரடியாக வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் `கனா காணும் காலங்கள்’ என்ற தொடரின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார் நடிகர் பால சரவணன். தொடர்ந்து அவர் வெள்ளித்திரையில் நுழைந்து, தன்னுடைய திறமையால் பல்வேறு வெற்றிப் படங்களில் முகம் காட்டத் தொடங்கினார். `குட்டிப் புலி’, `திருடன் போலீஸ்’, `டார்லிங்’, `ஒரு நாள் கூத்து’, `அதே கண்கள்’, `களத்தில் சந்திப்போம்’, `பண்ணையாரும் பத்மினியும்’ முதலான படங்களில் காமெடி வேடத்தில் நடித்து மக்களிடம் வரவேற்பைப் பெற்றவர் பால சரவணன்.
கிரிக்கெட் வீரரான நடிகர் பால சரவணன் கடந்த காலத்தில் உடல் பருமனுடனே இருந்து வந்தார். 35 வயதைக் கடந்திருக்கும் பால சரவணன் சமீபத்தில் வெளியிட்டுள்ள படத்தில் தன்னுடைய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 2019ஆம் ஆண்டு தன்னுடைய உடல் அமைப்புக்கும், தற்போதைய உடல் அமைப்புக்கும் இடையிலான வித்தியாசத்தைக் காட்டும் விதமாகப் பதிவிட்ட பால சரவணன் தனக்குப் பயிற்சி அளித்த மித்ரன் என்பவருக்குத் தன் பதிவில் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவில் அவர் `2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டயட் கடைபிடிக்கத் தொடங்கினேன்; 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் போது சுமார் 22 கிலோகிராம் குறைத்துள்ளேன்.. மித்ரனுக்கு நன்றி.. மகிழ்ச்சி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் `டான்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பால சரவணன். இதில் அவர் கல்லூரி மாணவராக நடிப்பதால் இந்த மாற்றம் எனவும் கூறப்படுகிறது. இந்தத் திரைப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவாங்கி, முனீஸ்காந்த், காளி வெங்கட், சமுத்திரகனி, எஸ்.ஜே.சூர்யா முதலான நடிகர்களும் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர்.