சினிமாவில் இசையமைப்பாளர்களின் பங்கு இன்றியமையாதது. காலகாலமாக ஏராளமான இசையமைப்பாளர்களை நமது தமிழ் சினிமா கண்டுள்ளது. அந்த வகையில் தந்தையின் வழியே மகன்களும் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களாக கலக்கி வருகிறர்கள். அவர்களின் ஒரு சில அப்பா - மகன் பற்றி தெரிந்து கொள்ளலாம் :


 



இளையராஜா - கார்த்திக்ராஜா- யுவன் ஷங்கர் ராஜா : 


அன்னக்கிளி திரைப்படம் மூலம் 1976ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. மேஸ்ட்ரோ, இசைஞானி என உலகளவில் கொண்டாடப்படும் இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வருகிறார். ரொமான்டிக் பாடல்களுக்கு உயிர் கொடுக்கும் யுவனுக்கு ஏராளமான யூத் ரசிகர்கள் உள்ளனர். தந்தையை போலவே ஜூனியர் மேஸ்ட்ரோ என கொண்டாடப்படுகிறார் யுவன் ஷங்கர் ராஜா. சரத்குமார் நடித்த 'அரவிந்தன்' திரைப்படம் மூலம் அறிமுகமானார்.  இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக்ராஜாவும் இசையமைப்பாளர் ஆவார். கமல்ஹாசன் நடித்த திரைப்படம் உள்பட பல படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.



தேவா - ஸ்ரீகாந்த் தேவா :


தேனிசை தென்றல் தேவா கானா பாடல்களுக்கு பெயர் போனவர். நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாமலை, பாட்ஷா, முத்து என பல ஹிட் படங்களுக்கும் இசையமைத்தவர் தேவா. இன்றும் சூப்பர் ஸ்டார் என ரஜினிகாந்தின் டைட்டில் கார்டுக்கு பின்னணியில் ஒலிக்கும் இசைக்கு சொந்தக்காரர் தேவா. 1989ம் ஆண்டு 'மனசுக்கேத்த மகாராசா' திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.


அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் ஒரு பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ள ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பாளராக அறிமுகமானது 2000ம் ஆண்டு வெளியான 'டபுள்ஸ்' என்ற திரைப்படத்தில். விஜய் நடித்த படம் உள்பட 80க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 


 



கங்கை அமரன் - பிரேம்ஜி :


ஒரு விடுகதை ஒரு தொடர்கதை திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்  கங்கை அமரன். அவரின் இசையில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றும் எவர்கிரீன் சூப்பர் ஹிட் பாடல்கள். இவரின் மகன் பிரேம்ஜி அமரனும் ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2005ம் ஆண்டு வெளியான 'ஞாபகம் வருதே' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். 
 
ரய்ஹானா - ஜி.வி. பிரகாஷ் :


இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ரய்ஹானாவும் பல படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்துள்ளார். பல ஹிட் பாடல்களை பாடியுள்ள ரய்ஹானா 2004ம் ஆண்டு வெளியான 'மச்சி' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அவரின் மகன் ஜி.வி. பிரகாஷ் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்த இளம் வயதிலேயே தேசிய விருது பெரும் அளவிற்கு அபாரமான இசை ஞானம் கொண்டவர். நடிகராகவும் தன்னை நிலைநிறுத்தி கொண்டவர்.  2006ம் ஆண்டு வெளியான 'வெயில்' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 


இளையராஜா - கார்த்திக் ராஜா :


இசைஞானி இளையராஜாவின் முதல் மகன் கார்த்திக் ராஜாவும் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். 1992ம் ஆண்டு வெளியான 'பாண்டியன்' படம் மூலம் அறிமுகமானார். இவரின் இசையில் டும் டும் டும், உள்ளம் கொள்ளை போகுதே, உல்லாசம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற திரைப்படங்களின் பாடல்கள் ஹிட் பாடல்களாக அமைந்தன.  


ஏ.ஆர். ரஹ்மான் - கதீஜா ரஹ்மான் :


இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் தற்போது இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மின்மினி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். எந்திரன் படத்தில் 'புதிய மனிதா' பாடலை பாடியவர் கதீஜா ரஹ்மான். பாடகியாக பல பாடல்களை பாடிய இவர் தற்போது இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.