இளம் வயதிலேயே தேசிய விருது பெற்ற இசையமைப்பாளராக மிகவும் பிரபலமானவராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். உலகமே கொண்டாடும் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மருமகனான ஜி. வி. பிரகாஷ் தென்னிந்திய சினிமாவின் பாரம்பரியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். இசையோடு சேர்ந்து ஒரு நட்சத்திர நடிகராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். 



'சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே' என்ற சூப்பர் ஹிட் பாடலின் அந்த ஸ்டார்டிங் லைனை பாடிய சுட்டி பையனாக திரைத்துறையில் பாடகராக அறிமுகமானவர். அதை தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பல சிறுவர்களின் பாடல்களை பாடியுள்ளார். 


 




ஒரு இசையமைப்பாளராக வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான 'வெயில்' படத்தின் மூலம் அறிமுகமானார் ஜி.வி. பிரகாஷ். வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி என்ற அந்த பாடலின் வரிகளுக்கு இசையால் உயிர் கொடுத்து பலரின் நினைவுகளோடு உறவாடினார். முதல் படத்திலேயே அனைவரின் கவனம் ஈர்த்தார். அடுத்தடுத்து அவர் இசையமைத்த பொல்லாதவன், கிரீடம், மதராசபட்டினம், தெய்வத்திருமகள், சைவம், ஆடுகளம், அசுரன், ஆயிரத்தில் ஒருவன், தெறி, ராஜா ராணி,  என வெற்றிப்படிகளில் ஏறி உச்சாணிக்கொம்பில் எட்டினார். ஒரு இளைஞனாக துடிப்புமிக்க பாடல்களால் டீன் ஏஜ் பசங்களை மட்டுமன்றி அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் ஏராளமான மனதை வருடும் மெலடி பாடல்களை கொடுத்துள்ளார்.   


முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கு மட்டுமின்றி அடித்தளம் அமைக்கும் இயக்குநர்களின் பாடலுக்கு இசையமைத்து  ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகிலும் பிரபலமானவர். இவரை ஒரு தனிப்பட்ட ஜனார் பாடல்களை மட்டுமே கொடுக்க கூடியவர் என ஒரு வரையறைக்குள்  சிக்கிக்கொள்ளாமல் பலதரப்பட்ட பாடல்களையும், வலுவான பிரமிக்க பின்னணி இசை மூலமும் பாராட்டத்தக்க ஒரு இசையமைப்பாளராக இருந்து வருகிறார். 


ஏ.ஆர். ரஹ்மான், இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், இமான் என பல முத்திரை பதித்த பல இசையமைப்பாளர்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை உறுதியாக தடம் பதித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். ஒரு இசையமைப்பாளராக ஒரு பக்கம் உறுதியான இடத்தை தக்க வைத்துள்ள ஜி.வி. பிரகாஷ் ஒரு நடிகராகவும் தன்னை நிரூபித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை குவித்துள்ளது. விடலை பருவமாக இருந்தாலும், முதிர்ச்சியான கதாபாத்திரங்களாக  இருந்தாலும் தனக்கான ஒரு இடத்தை கைப்பற்றி விட்டார். இந்த பன்முக கலைஞன் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மேலும் பல வெற்றிகளும் கிரீடங்களும் அவரை  அழகுபடுத்த மனமார்ந்த வாழ்த்துக்கள்!