தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இளைஞர்களில் ஒருவராக உள்ள இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு இன்று பிறந்தாளாகும். 


கங்கை அமரனின் வாரிசு


அடிப்படையிலேயே கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் வெங்கட் பிரபு. அவரது தந்தை கங்கை அமரனை தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களும் நன்கு அறிவார்கள். அப்பேற்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த வெங்கட் பிரபு படிப்பை முடித்து கலையுலகிற்கு வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் தனது ஒன்றுவிட்ட சகோதரர்களான யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் பாடல்களின் டெமோக்களுக்கு பாட தொடங்கினார். 


பின்னணிப் பாடகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 1996 ஆம் ஆண்டு தம்பி பிரேம்ஜி, நண்பர் எஸ்.பி.பி.சரண் ஆகியோரோடு இணைந்து இசைக்குழு ஒன்றை நிறுவினார்.பின்னர் 1997 ஆம் ஆண்டு பூஞ்சோலை என்னும் படத்தில் வெங்கட் பிரபுவை ஹீரோவாக அறிமுகம் செய்ய கங்கை அமரன் முடிவு செய்தார். ஆனால் பாதி படம் உருவாகி கைவிடப்பட்ட நிலையில், 2002 ஆம் ஆண்டு வெளியான ஏப்ரல் மாதத்தில் படம் தான் அவருக்கு முதல் சினிமா எண்ட்ரீயாக அமைந்தது. 


நடிகர் டூ இயக்குநர்


இதனைத் தொடர்ந்து அஜித் நடித்த ஜி, விஜய் நடித்த சிவகாசி, சமுத்திரகனி இயக்குநராக அறிமுகமான உன்னை சரணடைந்தேன், மழை மற்றும் ஞாபகம் வருதே என பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தார் வெங்கட் பிரபு. இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு “சென்னை 600028” படம் வெளியானது. இப்படத்தின் மூலம் இயக்குநராக களம் கண்டார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய அப்படம் 100 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் இளைஞர்களின் பேவரைட் இயக்குநராக தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். 


இந்த படத்தில் அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ், ஜெய், பிரேம்ஜி, நிதின் சத்யா, சம்பத் ராஜ், வைபவ், விஜய் வசந்த், விஜயலட்சுமி என பலரும் நடித்திருந்தனர். இந்த கூட்டத்தை இதன்பின்னர் வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 28 பார்ட் -2 , மாநாடு, மன்மத லீலை, கஸ்டடி ஆகிய படங்களில் இடம் பெற்றிருப்பதை காணலாம். ஆக மொத்தத்தில் இவர்கள் இல்லாமல் வெங்கட் பிரபு படமே இல்லை. குறிப்பாக தம்பி பிரேம்ஜி இல்லாமல் அவரால் ஒரு படத்தை யோசிக்கவே முடியாது. 


அதேசமயம் பாடகராக தன் படங்கள் மட்டுமல்லாது ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார் வெங்கட் பிரபு. 


அஜித்.. கார்த்தி.. சூர்யா.. விஜய்


ஆரம்பத்தில் முதல் 3 படங்கள் தன்னுடைய குழு நடிகர்களை கொண்டே படம் எடுத்த வெங்கட் பிரபு, 4வதாக நடிகர் அஜித்தின் 50வது படமான ‘மங்காத்தா’வை இயக்கினார். தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் படங்களில் ஒன்றாக கொண்டாட்டப்படும் அப்படத்தின் வெற்றி வெங்கட் பிரபுவை உச்சத்துக்கு கொண்டு சென்றது. இதன்பின்னர் கார்த்தியை வைத்து பிரியாணி, சூர்யாவை வைத்தும மாசு என்கிற மாசிலாணி படத்தையும் எடுத்தார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படம் நிச்சயம் தமிழ் சினிமாவே திரும்பி பார்க்கும் வகையில் இருக்கும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெங்கட் பிரபு..!