ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, 48 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரின் 38 வது லீக் போட்டி இன்று (நவம்பர் 6) நடைபெற்றது.
இலங்கை - வங்கதேசம்:
டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கியது இலங்கை அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிஷங்கா மற்றும் குசல் பெரேரா ஆகியோர் களம் இறங்கிறனர்.
அதில், பதும் நிஷங்கா 36 பந்துகள் களத்தில் நின்று 8 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 41 ரன்கள் எடுத்தார். முன்னதாக 5 பந்துகளில் குசல் பெரேரா ஆட்டமிழந்தார்.
பின்னர், வந்த குசம் மெண்டீஸ் 19 ரன்களில் ஆட்டமிழக்க, சதீர சமரவிக்ரமா 41 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அப்போது களம் கண்ட சரித் அசலங்கா தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தினார். வங்கதேச பந்து வீச்சாளர்களின் பந்துகளை விரட்டினார்.
அதன்படி, 105 பந்துகள் களத்தில் நின்ற அவர் 108 ரன்கள் எடுத்தார். இதில் மொத்தம் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.
ஏஞ்சலோ மேத்யூஸ் விக்கெட்:
இவரது விக்கெட்டிற்கு பின்னர் களமிறங்கினார் ஏஞ்சலோ மேத்யூஸ். இவர் பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்னதாக, களத்தில் நின்றபடி ஹெல்மெட் சரியில்லை என்பதால் ஹெல்மெட்டை சரிசெய்து கொடுக்கும் படி தன் அணியினரிடம் கேட்டு கொண்டிருந்தார்.
அப்போது, வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் இவர் மீது நடுவரிடம் அப்பீல் செய்தார். அப்போது நடுவர் மேத்யூஸ் பேட்டிங் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டார் என்ற அடிப்படையில் விக்கெட் என்று அறிவிக்க ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ’டைம் அவுட்’ முறையில் சோகத்துடன் பெவிலியன் திரும்பினார் மேத்யூஸ்.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 49.3 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் எடுத்தது.
நஜ்முல் ஹொசைன் - ஷகிப் அல் ஹசன் அதிரடி:
பின்னர் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த நஜ்முல் ஹொசைன் மற்றும் அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து இலங்கை அணியின் பந்துகளை நொறுக்கினார்கள். அதன்படி நஜ்முல் 90 ரன்களும் ஷகிப் 82 ரன்கள் எடுத்தனர். பின்னர் இருவரும் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தனர்.
முக்கியமாக இந்த இரண்டு விக்கெட்டுகளையும் வங்கதேச அணி வீரர் மேத்யூஸ் தான் வீசிய 31 வது ஓவரில் கைப்பற்றினார். இதனிடையே வெற்றி இலக்கை எட்டி இலங்கை அணியை வீழ்த்தியது வங்கதேச அணி.