தமிழ் சினிமா துவங்கிய காலத்திலிருந்தே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு நடிகர் கொண்டாடப்படுவது இங்கு இயல்பே. ஆனால் ஒருவர் மட்டும் தன்னைச் சுற்றி நடக்கும் கொண்டாட்டங்களை கண்டுகொள்ளாமல் தன் பணியையும், தன் கடமையையும் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் என்றால் அது தான் அவருக்கான அடையாளம். சினிமாவை ரசிக்கும் ஒவ்வொருவரும் இவரை ரசிக்கிறார்கள். அழுக்குச் சட்டை போட்டாலும் அழகாய் தெரியும் ஆணழகன் என கொண்டாடுகிறார்கள். எத்தனை கொண்டாடினாலும் அதற்கான தலைகணம் எப்போதும் இவரிடம் இருந்ததில்லை. காரணம்… தமிழ் சினிமா தலை மேல் வைத்து கொண்டாடும் ‛தல’ இவர் தான். அமராவதியில் துவங்கி ஆசை ஆசையாய் உன்னைத் தேடி வந்த முகவரியை, அமர்க்களப்படுத்தி உல்லசாமாய் காதல் கோட்டை கட்டி, நீ வருவாய் என காத்திருந்த பூவெல்லாம், உன்வாசம். காதல் கோட்டையில் காதல் மன்னனாய் அமர்க்களம் செய்த ஆனந்தபூங்காற்றே… உன்னைக் கொடு என்னைத் தருவேன் என பலர் ஏங்க, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என நேசம் காட்டிய உன் வரலாறு கண்டுகொண்டேன்… கண்டுகொண்டேன்.
எத்தனை வில்லன்களை கண்டாலும் நேர்கொண்ட பார்வையாய் வீரமும் விவேகமும் கொண்டு தன்னை நம்பியவர்களுக்கு விஸ்வாசமாய் தனி கிரீடம் சுமக்கும் தமிழ் சினிமாவின் ஓப்பனிங் கிங் அஜித்குமாரின் பிறந்தநாள் இன்று. வழக்கம் போல இந்த பிறந்தநாளையும் அவர் பொதுவெளியில் கொண்டாடப்போவதில்லை. ஆனாலும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் கோலாகலமாய் கொண்டாடப்படுகிறது. ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என்றாலும் குவிகிறது. விளம்பரம் வேண்டாம் என்றாலும் வெளிச்சம் பாய்கிறது. நடை, உடை, சிகை எதையும் பொருட்படுத்தவில்லை என்றாலும் அதுவும் பேஷனாகிறது. அரசியலை விரும்பாதவர் என்றாலும் அவர் அணியும் மாஸ்க் கூட அரசியல் பேசுகிறது. ஆனாலும் அவர் எவரிடத்திலும் பேசுவதில்லை.
தனக்கென ஒரு உலகம். அதில், தானே ராஜா என தனித்துவத்துடன் தன் சினிமா வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் வலிகளை கடந்த அஜித்தின் வலிமை அனைவரும் அறிந்ததே.
தமிழ் திரையுலகின் ‛மிஸ்டர் கிளீன்’ என்கிற அடையாளத்தோடு வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் ஆசை நாயகன், அல்டிமேட் ஸ்டார், இப்போது தல என கொண்டாடப்படும் அஜித் குமாரின் பிறந்த நாளில் அவரை வாழ்த்துகிறது ABP நாடு.