தன்னுடைய பிங்க் படத்திற்காக, தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் அதற்காக பழிதீர்க்க நினைத்ததாகவும் நடிகை டாப்ஸி பன்னு தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவர் டாப்ஸி பன்னு. இவர் தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளுக்காக  கோலிவுட், மாலிவுட்,பாலிவுட் போன்றவற்றில் தனி ரசிகர் பட்டாளமே இவருக்கு உண்டு. 



அவர் நடிப்பில் புதிதாக ராஷ்மி ராக்கெட் என்ற படம் வெளியாகவுள்ளது. இந்தப்படம் வரும் அக்டோபர் 15ம் தேதி zee5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அகர்ஷ் குரான் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தமிழ் இயக்குநரான நந்தா பெரியசாமி திரைக்கதை எழுதியுள்ளார். இந்தப் படம் தமிழிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனை நந்தா பெரியசாமி இயக்கவுள்ளார்.


கடைசியாக டாப்ஸி பன்னு நடித்த ஹசீன் தில்ரூபா ஓடிடி தளத்தில்தான் வெளியானது. அதேபோல அனபெல் சேதுபதியும் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில்தான் தற்போது ராஷ்மி ராக்கெட் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்களா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், வழக்கமான விருதுகளுக்காகவே நான் ஒருபோதும் ‘லாபியில்’ ஈடுபட்டதில்லை, என்னுடைய வேலைதான் எனக்காக பேச வேண்டும்” என தெரிவித்தார்.





மேலும் எனக்காக ஒரு விருது கொடுங்கள் என நான் யாரைக் கேட்க முடியும்? நான் என்ன செய்ய முடியும்? என்னால் என்னுடைய பெஸ்ட்டைதான் பெர்ஃபார்ம் செய்ய முடியும். அதுதான் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். இதுவரை வழக்கமான விருதுகளுக்காவே நான் எனக்குதான் விருது வேண்டும் என எந்த வகையிலும் லாபியில் ஈடுபட்டதில்லை. அதனால்தான் ஒரே ஒரு விருதை வெல்லவே எனக்கு நெடுங்காலம் எடுத்தது. தேசிய விருதை வெல்வதற்காக என்னால் எப்படி லாபி செய்ய முடியும் என கேள்வியெழுப்பினார். 
இந்த வருடம் விருது ஜெயிக்கவில்லையென்றால் அடுத்த வருடம் இன்னொரு பெர்ஃபாமன்சோடு வருவேன். 2016ம் ஆண்டு என்னுடைய பிங்க் படத்திற்கு எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காதது  முதல் இந்த அணுகுமுறையைத் தான் கொண்டுள்ளேன். அதிலிருந்து, மீண்டும்  ஆடியன்ஸ் என்னுடைய வேலையை  பார்க்கும்படியான பெர்ஃபாமன்ஸைக் கொடுத்து பழிதீர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டேன். அதுதான் நிஜத்தில் என்னுடைய கட்டுப்பாட்டில் இருந்தது என தெரிவித்துள்ளார்.





ஏற்கெனவே தன்னுடைய பிங்க் படத்திற்காக தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததற்காக தன்னுடைய வருத்ததை வெளிப்படுத்தியிருந்தார். அப்போது, ஒரே ஒரு முறைதான் உடைந்துபோனேன். என்னை பார்ப்பவர்கள் எல்லாரும், படத்தில் என்னுடைய நடிப்பைப் பற்றி பாராட்டி பேசிக்கொண்டே இருந்தார்கள். ஆனாலும் எனக்கு எந்த விருதுகளும் கிடைக்கவில்லை. இரண்டு இடங்களில் நான் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டேன் ஆனாலும் அங்கு விருது கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் அவருடைய புதிய படம் வெளியாகவுள்ள நிலையில், விருது முக்கியமில்லை, என்னுடைய பெர்ஃபாமென்ஸ்தான் முக்கியம் என அதிரடியாக தெரிவித்துள்ளார் டாப்சி.