ஒரு மென்பொருள் நிபுணராக இருந்து பின்னர் மாடலிங் வாயிலாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை டாப்ஸி. 2010ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சும்மாண்டி நாதம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். தனுஷ் ஜோடியாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான டாப்ஸி ஒரு ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தை சேர்ந்த பெண் கதாபாத்திரத்தில் மிக கச்சிதமாக பொருந்தி இருந்தார். 


ஆடுகளம் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை டாப்ஸி தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பெரும்பாலும் வுமன் சென்ரிக் திரைப்படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். 



சுருள் முடியால் பட்ட அவமானங்கள் :


டாப்ஸி பன்னு சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலின் போது தனது வாழ்க்கையில் அவர் சந்தித்த அவமானங்கள், ஏளனங்கள் பற்றி மனம் திறந்து பேசியிருந்தார். அவர் கூறுகையில் "நான் மாடலிங் துறையில் நுழைந்த ஆரம்ப காலகட்டங்களில் ஏராளமான அழகி போட்டிகளில் பங்கேற்று உள்ளேன். அந்த சமயத்தில் இந்திய அழகி போட்டி ஒன்றில் கலந்து கொண்டேன். அங்கு இருந்த அரசியல் எனக்கு அருவருப்பை கொடுத்தது. என்னுடைய சுருட்டை முடியை மிகவும் ஏளனப்படுத்தியது எனக்கு மிகுந்த மனவேதனையை கொடுத்தது. இந்திய அழகி போட்டியில் சுருட்டை முடியை வைத்து கொண்டு ஜெயிக்க முடியாது என மிகவும் கடுமையான வார்த்தைகளால் கேலி செய்தனர். ஒரு படி மேலே போன கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு வேளை நீங்கள் இந்த இந்திய அழகி போட்டியில் வெற்றிபெற்றால் எங்களின் கார்ப்பரேட் நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அதுமட்டுமின்றி நீங்கள் வெற்றி பெற்ற தொகையில் 30 % எங்களிடம் கொடுக்க வேண்டும் என ஏராளமான நிபந்தனைகளை விதித்தனர். அந்த நாட்கள் எனது வாழ்நாளில் மிக மோசமான நாட்களாக கருதுகிறேன்" என்றார் டாப்ஸி


விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி : 


இவற்றை எல்லாம் கடந்து வந்த நடிகை டாப்ஸி 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய அழகி போட்டியில் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். அது மட்டுமின்றி அதே போட்டியில்  மிஸ் ஃபெமினா, மிஸ் ஃப்ரெஷ், மிஸ் ஃபேஸ் என பல பட்டங்களை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையிலேயே சுருட்டை தலைமுடி கொண்ட நடிகைகளை பெரும்பாலும் பார்க்க முடியாது. அந்த வகையில் சுருள் முடி கொண்ட பெண்ணாக மிகவும் உத்வேகத்துடன் காட்சியளிக்கும் மிகவும் போல்ட்டான ஒரு நடிகையாக வலம் வருகிறார் டாப்ஸி.