இந்திய சினிமாவில் மிகவும் துணிச்சலான நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை டாப்ஸி. வித்தியாசமான படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் டாப்ஸி தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்துள்ளார். அதிலும் குறிப்பாக பெண் ரசிகைகள் தான் ஏராளம். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வரும் டாப்ஸி, 10 ஆண்டுகளாக காதலித்து வந்த காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சுருள் முடியுடன் தோற்றமளிக்கும் டாப்ஸி பண்ணு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். 2010ம் ஆண்டு கே. ராகவேந்திர ராவின் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான 'ஜும்மாண்டி நாதம்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல ஒரு வரவேற்பையும் பாராட்டையும் பெற்று கொடுத்ததால் அதை தொடர்ந்து மூன்று தெலுங்கு படங்களில் உடனடியாக கமிட்டாகி முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம்பெற்றார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'ஆடுகளம்' படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக அறிமுகமானார். அப்படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்தது கனகச்சிதமாக பொருந்தியிருந்தது. அதை தொடர்ந்து வந்தான் வென்றான், கதை திரைக்கதை வசனம், இயக்கம், காஞ்சனா 2 , வை ராஜா வை, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தார். 2021ம் ஆண்டு வெளியான 'அனபெல் சேதுபதி' படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் டாப்ஸி நடிக்கவில்லை.
டேவிட் தவான் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான 'சஷ்மே படூர்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தாலும் அவருக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்து 2016ம் ஆண்டு வெளியான 'பிங்க்' திரைப்படம். அப்படத்திற்கு பிறகு பாலிவுட்டில் டாப்ஸி மார்க்கெட் எகிறியது. சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'டங்கி' படத்தில் நடித்திருந்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக டாப்ஸி, டென்மார்க் பேட்மிண்டன் வீரரும் நடிகருமான மதியாஸ் போவை காதலித்து வந்த நிலையில் அவர்களின் திருமணம் கடந்த மார்ச் 23ம் தேதி மிகவும் எளிமையான முறைகள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ நடைபெற்றது. கடந்த மார்ச் 20ம் முதல் திருமணத்திற்கு முன்னதான கொண்டாட்டங்கள் நடைபெற்றன. பாலிவுட் திரையுலகை சேர்ந்த மன்மர்சியான், டோபரா, அனுராக் காஷ்யப், ஹசீன் தில்ருபா, கனிகா தில்லான் உள்ளிட்ட ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
2012-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றவர் மதியாஸ் போ என்பது குறிப்பிடத்தக்கது. டாப்ஸி பண்ணு - மதியாஸ் போ திருமண புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.