தமிழக மக்களுக்கு விடியல் வரவேண்டும் என்றால் வரக்கூடிய தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
திருவண்ணாமலை பாராளுமன்ற திமுக வேட்பாளர் சி. என். அண்ணாதுரை ஆதரித்து இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை காந்தி சிலையின் முன்பாக உரையாற்றினார். இந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மூன்று லட்சத்திற்கும் மேல் வாக்களித்து சி. என். அண்ணாதுரை வெற்றி பெற செய்தீர்கள் அதேபோல் இந்த தேர்தலில் குறைந்தது 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அண்ணாதுரை ஜெயிக்க வைத்தால் மாதம் இருமுறை நானே உங்களது தொகுதிக்கு வந்து உங்களது குறைகளை தீர்த்து வைப்பேன். மாநில இளைஞர் அணி செயலாளர் ஆக உள்ள நான் மாவட்ட இளைஞர் அணி செயலாளருக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன், திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் இந்த மாவட்டத்தில் நெல் அரிசி வியாபாரிகளுக்கு ஏற்றுமதி மையம் அமைக்கப்படும், நிலுவையில் உள்ள திருவண்ணாமலை திண்டிவனம் ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும், திருவண்ணாமலை - திருப்பத்தூரில் ரயில் பாதை அமைக்கப்படும், 36 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நான் கல்லை காட்டுகிறேன் ஆனால் எடப்பாடி மோடியிடம் பல்லை காட்டுகிறார்
சாத்தனூர் அணையில் இருந்து புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்” என உள்ளிட்ட வாக்குறுதிகளை திருவண்ணாமலை பாராளுமன்ற வேட்பாளரின் சார்பில் தெரிவித்தார்.
மேலும், ”தேர்தல் வருவதால் தான் மத்திய அரசு சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைத்து உள்ளன என குற்றம் சாட்டிய உதயநிதி, கடந்த தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் 95 சதவீதத்திற்கும் மேல் நிறைவேற்றி உள்ளோம். குறிப்பாக மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் பொதுமக்கள் இடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. எந்த திட்டத்தினை மக்கள் அதிகளவு பயன்படுத்துகிறார்களோ அப்போதுதான் அந்த திட்டம் வெற்றி அடையும் என்பதன் அடிப்படையில் இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. காலை உணவு திட்டத்தினால் தங்களின் குழந்தைக்கு உணவு தர ஸ்டாலின் உள்ளார் என்ற எண்ணம் தற்போது அனைத்து தாய்மார்களுக்கும் வந்துவிட்டது. அந்த திட்டம் வந்துவிட்டது, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ஒரு கொடியை 16 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். நான் கல்லை காட்டுகிறேன். ஆனால் எடப்பாடி மோடியிடம் பல்லை காட்டுகிறார். மழை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத மோடி தற்போது தேர்தலுக்காக தமிழகம் வந்து கொண்டு இருக்கிறார்.
உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடி தாருங்கள்
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் வெள்ள நிவாரணம் கேட்டோம். ஆனால் ஒரு பைசா கூட மத்திய அரசு தரவில்லை, ஜிஎஸ்டி வரி பல கோடி ரூபாய் தமிழகம் கொடுத்துள்ள நிலையில் வெறும் ஒன்றரை லட்சம் கோடினால் தமிழகத்திற்கு மத்திய அரசு தருகிறது. தமிழக மக்களுக்கு விடியல் வரவேண்டும் என்றால் வரக்கூடிய தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடி தாருங்கள், தற்போது நான் வந்தது ட்ரெய்லர்தான். மெயின் பிக்சர் பின்னாடி வருகிறது” என வருகின்ற மூன்றாம் தேதி ஸ்டாலின் திருவண்ணாமலை பரப்புரை மேற்கொள்ளஉள்ளதை உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.
வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் திமுகவின் வெற்றியை கலைஞர் பிறந்த நாளின் பிறந்தநாள் பரிசாக பொதுமக்கள் கொடுங்கள் என பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும் இஸ்லாமிய சகோதரர் ஜான் பாஷா மகளுக்கு பெளசியா என உதயநிதி ஸ்டாலின் பெயர் சூட்டினார்.