இன்றைய காலகட்டத்தில் டச்சிங், கிஸ்ஸிங், ரொமான்ஸ் இல்லாத காதல் படம் என்றால் சந்தேகத்துடன் பார்ப்பார்கள். ஆனால் இவை எதுவும் இல்லாமல் 80களில் காதலர்கள் கொண்டாடிய ஒருவர் என்றால் அது டி. ராஜேந்தர் தான். ஹீரோயின் மீது ஹீரோவின் விரல் கூட படாது. அது தான் டி. ஆர் படங்களில் உள்ள தனி சிறப்பு.


1980ல் தனது முதல் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், இசை என அனைத்துமே டி. ராஜேந்தர் தான் எழுதினார் என்றாலும் தயாரிப்பாளர் இப்ராஹிம் உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக டைட்டிலில் டி.ஆர். பெயர் இடம் பெறவில்லை. அவரின் பெயர் டைட்டில் கார்டில் போட்டு வெளியான முதல் படம் 1981ம் ஆண்டு வெளியான 'இரயில் பயணங்களில்' தான். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து. 


மேலும் அவரின் திரை வாழ்க்கையில் சூட்டப்பட்ட மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரகல்லாக அமைந்தது. மே 20ம் தேதி வெளியான இப்படம் இன்றுடன் 42 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


 



ஹீரோவாக ஸ்ரீநாத்தும் ஹீரோயினாக ஜோதியும் அட்டகாசமாக நடித்து கொடுத்த படம் 'இரயில் பயணங்களில்'. காதல் படம் என்றால் வில்லன் ஒருவன் இருப்பான் அல்லவா அவர் தான் நடிகர் ராஜீவ். எழுத்தாளரான நாயகிக்கும், பாடகரான ஹீரோவுக்கும் இடையே அப்படி பட்ட காதல் என்றாலும் அதை இருவருமே வெளிப்படையாக தெரிவித்து கொள்ளாமல் மௌனமாகவே இருக்கிறார்கள். துரதிஷ்டவசமாக வில்லன் ராஜீவ் உடன் ஹீரோயினுக்கு திருமணம் நடைபெறுகிறது.


திருமணத்திற்கு பிறகு மனைவியின் முன்னாள் காதல் பற்றி தெரிய வர வார்த்தைகளால் சுட்டெரிக்கிறார் வில்லன். கணவனால் சித்ரவதை அனுபவிக்கும் ஹீரோயின் ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் தேவதாஸாக ஹீரோ அலைகிறார். ஒரு கட்டத்தில் காதலி படும் கொடுமையை பற்றி தெரிய வர காதலியின் கணவனிடம் போய் சமரசம் செய்ய போகிறார் காதலன். அங்கே ஒரு ட்விஸ்ட்டோடு எண்டு கார்டு போடுகிறார் டி.ஆர். அவரின் இயக்கத்தில் வெற்றி பெற்ற படங்களில் மிக முக்கியமான படமாக இரயில் பயணங்களில் அமைந்தது. 


டி.ஆர். என்றாலே அவரின் அடுக்குமொழி வசனங்கள் தான் சிறப்பு. அப்படி அவரின் வசனங்கள் மற்றும் பாடல் வரிகள் வரும் இடங்களில் எல்லாம் கிளாப்ஸ் திரையரங்கை அதிர செய்தது. 80களில் காதலர்களின் மிகவும் ஃபேவரைட் படமாக அமைந்த 'இரயில் பயணங்களில்' படம் 42 ஆண்டுகளை கடந்தும் மெய்சிலிர்க்க வைக்கிறது என்பதே உண்மை..!


மேலும் படிக்க: Pichaikaran - Demonetisation: பிச்சைக்காரன் படத்தை ஃபாலோ செய்கிறதா மத்திய அரசு..? இப்படி ஒரு சம்பந்தமா..?