விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன் -2  திரைப்படம் வெளியான நாளிலேயே, 2000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டு இருப்பது ஒரு சுவாரஸ்யமான சம்பவமாக உருவாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த ஒரு வசனத்தை உண்மையாக்கும் விதமாக தான், மத்திய அரசு 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது குறிப்பிடத்தக்கது.


2000 ரூபாய் நோட்டு செல்லாது:


நாடு முழுவதும் ரூபாய் 2 ஆயிரம் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் குறைந்த அளவே அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும், மே 23ம் தேதி முதல் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. 


”பிச்சைக்காரன்” படத்திற்கு என்ன தொடர்பு:


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த மிகப்பெரிய முடிவுகளில் ஒன்று, 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான். இந்த அறிவிப்பின்படி, நாட்டில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அதே ஆண்டில் மார்ச் மாதம், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தில் இந்த பணமதிப்பிழப்பு குறித்து பேசப்பட்டு இருந்தது.


அதன்படி, ஊழலை தடுப்பது குறித்து ஒரு பிச்சைக்காரர் கதாபாத்திம் பேசும்பொழுது, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை தடை செய்வதன் மூலம் பணப்பதுக்கலை ஒழிக்க முடியும் என கூறுவார். அதே கருத்தை பிரதிபலிக்கும் விதமாக தான், அந்த ஆண்டின் இறுதியில் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது. ஆனால், புதியதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது கடும் விமர்சனத்திற்கு ஆளானது. பண பதுக்கலை தடுக்க ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை தடை செய்ததாக கூறும் மத்திய அரசு, ரூ.2000 நோட்டை அறிமுகப்படுத்துவது எப்படி நியாயம் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.


பிச்சைக்காரன் - 2 வெளியீட்டில் நடந்த சுவாரஸ்யம்:


இந்த நிலையில் தான் விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள, பிச்சைக்காரன் 2 படம் இன்று வெளியானது. இதிலும் ஊழல் தொடர்பாக விரிவாக பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதி முதல் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.  விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படங்கள் வெளியாகிய இரண்டு வருடங்களிலும், மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாக இல்லாவிட்டாலும், சுவாரஸ்யமான சம்பவமாக கருதப்படுகிறது.