கடந்த 2002 ஆம் ஆண்டு பிரசன்னா, கனிஹா உள்ளிட்ட பலரின் நடிப்பால் உருவான ‘பைவ் ஸ்டார்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசி கணேசன். இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். பைவ் ஸ்டார் திரைப்படத்திற்கு பிறகு, விரும்புகிறேன் என்ற படத்தை அதே ஆண்டு வெளியிட்டார். அந்த படத்தில்தான் நடிகை சினேகா கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து திருட்டுபயலே, விக்ரமை வைத்து கந்தசாமி எடுத்திருந்தார். அந்த படத்தை பத்திரிக்கையாளர் ஞாநி கடுமையாக விமர்சிக்க, சுசி கணேசனுக்கும் , ஞாநிக்கும் இடையே வாய் தகராறானது. அதன் பிறகு திருட்டு பயலே படத்தை எடுத்திருந்தார். அந்த படத்தை இந்தியில் ரீமேக்கும் செய்தார். ஷார்ட்கட் ரோமியோ என்ற பெயரில் இந்தியில் வெளியான அந்த படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் தயாரித்தும் இருந்தார் சுசி கணேசன். இதில் பிரபல இந்தி நடிகை அமிஷா படேல், நீல் நிதின் முகேஷ், பூஜா குப்தா, மெஹ்ரின் உட்பட பலர் நடித்திருந்தனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தில் ஹே க்ரே என்ற பெயரில் வெளியாகும் திருட்டுப்பயலே 2 ரீமேக்கில் வினித் குமார் சிங், அக்ஷய் ஓபராய், ஊர்வசி ரவுத்லா ஆகியோருடன் தமிழ் நடிகை சீதாவும் நடிக்கிறார். பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வினித்குமார் சிங்கும். அமலாபால் ரோலில் ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார். மேலும் பிரசன்னா நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் அக்ஷய் ஓப்ராய் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் சீதா நாயகியின் அம்மாவாக நடிப்பதாக கூறப்படுகிறது. சீதா நடிக்கும் முதல் இந்தி படம் தில் ஹே க்ரே என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவைச் சேர்ந்த ர சுராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி படத்தை தயாரிக்கிறார்.படத்தின் முதற்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
metoo விவகாரத்தில் கவிஞர் லீலா என்பவர் சுசு கணேசன் மீது புகார் அளித்திருந்தார். அதற்கு நடிகை அமலா பாலும் ஆதரவாக இருந்த நிலையில், சுசி கணேசன் லீலா மீது தொடங்கிய மானநஷ்ட வழக்கில் லீலாவின் பாஸ்போட் முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.