இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநராக இருந்த சுசிகணேசன் விரும்புகிறேன், ஃபைவ் ஸ்டார், திருட்டுப் பயலே, கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதில் திருட்டுப் பயலே பலரது வரவேற்பை பெற்றது. சுசி இறுதியாக 2017ஆம் ஆண்டு பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா உள்ளிட்டோர் வெளியான ‘திருட்டுப் பயலே 2’ படத்தை இயக்கியிருந்தார்.
சமீபத்தில் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை சுசி கணேசன் வெளியிட்டிருந்தார். ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று தலைப்பிட்டுள்ள இப்படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதற்கிடையே,‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தின் இசையமைப்பாளராக இளையராஜாவை சுசி கணேசன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் மூலம் முதல் முறையாக இளையராஜாவுடன் சுசி கணேசன் இணையவுள்ளார். இதற்காக இயக்குநர் சுசிகணேசன் மும்பையிலிருந்து சென்னை வந்து இளையராஜாவைச் சந்தித்துப் பேசி இளையராஜாவுக்கான முன் பணத்தையும் சமீபத்தில் கொடுத்தார்.
இந்நிலையில், படக்குழுவினருடன் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதுமுகங்களை 'வஞ்சம் தீர்த்தாயடா' படத்தில் நடிக்க வைக்க இருக்கிறோம். நடிப்பில் ஆர்வமுள்ள 20 முதல் 40 வயது உள்ளவர்கள் தங்கள் வீடியோக்களை 4vmaxtv.com என்ற இணையதளத்தில் பதிவிடலாம்” என கேட்டுக்கொண்டார்.
முன்னதாக இளையராஜவை சந்தித்தது குறித்து பேசிய சுசிகணேசன், “கிராமத்து வாழ்க்கையில் ஊருணி தண்ணீரைப் பருகி வளர்ந்ததைப்போல இளையராஜாவின் இசையையும் உணவாக உண்டு வளர்ந்தவன் என்ற முறையில் எனது ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்திற்கு அவர் இசையமைப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்.
என்னுடைய முதல் படத்துக்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்று நான் கண்ட கனவு தற்போது நான் முதன்முதலாகத் தயாரிக்கும் படத்தில் நிறைவேறியுள்ளது. இப்படம் 1980களில் மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளது” என கூறியிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்