1997 ஆம் ஆண்டு சரத்குமார், தேவயானி, ராதிகா, மணிவண்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வெளியான திரைப்படம்  “சூர்ய வம்சம்”. தந்தை, மகன் என இருவேறு கதாபாத்திரங்களில் சரத்குமார் நடித்த இந்தப்படத்தை பிரபல இயக்குநர் விக்ரமன் இயக்கியிருந்தார். அன்றைய காலத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் இன்று வரை ஒரு கிளாசிக் படமாக இருந்து வருகிறது. பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி. செளத்ரி தயாரித்திருந்த இந்தப்படத்திற்கு, எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். 




இந்தப் படத்தின் பாடலையோ அல்லது பின்னணி இசையையோ இன்று கூட எங்கோ கேட்கும் போது அந்தப் படத்தின் நினைவுகள் நம்மை வந்து தழுவாமல் இருப்பதில்லை. அதே போல படத்தில் இடம்பெற்ற சரத்குமாரின் கதாபாத்திரமான சின்ராசுவும் பிரபலம். இப்படிப்பட்ட கல்ட் படமான சூர்ய வம்சம் படத்தின் இராண்டாம் பாகம் வெளிவர இருப்பதாக நடிகர் சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.




 


சூர்யவம்சம் பார்ட் -2 


இது குறித்து பிரபல இந்தியா கிளிட்ஸ் நிறுவனத்திற்கு பேசியிருக்கும் சரத்குமார், “செளத்ரி சாரும் நானும் படம் பண்ணனும்ணு பேசிட்டு இருந்தோம். அவர் சூர்ய வம்சம் கதையோட பார்ட் 2 ரெடி பண்ணிட்டு இருக்காரு.. இப்ப அவரு மலையாள ரீமேக்கான லூசிபர் படத்த தெலுங்லுல தயார் பண்ணிட்டு இருக்காரு.. அந்தப்படத்த முடிச்ச உடனே, இந்தப்படத்துக்கான வேலைகள ஸ்டார்ட் பண்ணலாம்னு சொல்லிருக்காரு.. இந்த வருஷத்தோட ஆகஸ்ட் மாசத்துல சூர்ய வம்சத்தோடு ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகலாம்.” என்று பேசியிருக்கிறார்.