திண்டுக்கல் மாவட்டத்தில், ஒரு  மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் உள்ளது. இதில் மொத்தம் 486 வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 8-வார்டு களுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 6 லட்சத்து 12 ஆயிரத்து 880 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 96 ஆயிரத்து 745 பேரும், பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 16 ஆயிரத்து 60 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 75 பேரும் உள்ளனர்.




திண்டுக்கல்லில் 737 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. இதில் 181  பதற்றமான வாக்குச் சாவடிகளாகவும், வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளை  கண்காணிப்பதற்காக உட்புறம், வெளிப்புறம் என இரண்டு கேமராக்கள் வீதம் 1494 சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.  திண்டுக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில்  ஆசிரியர்கள்,  அரசு ஊழியர்கள் என 3,600 பேர் ஈடுபட்டனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர். தேர்தல் நாளன்று வாக்குபதிவு தொடங்கிய நிலையில் காலை 7 மணி நிலவரப்படி 9 சதவீதம் வாக்குகளே பதிவாகி இருந்தது. இதற்கு பின்பும் 9 மணிவரை 15 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. காலை 10 மணிக்கு 25 சதவீதமும், பகல் 2 மணிக்கு 60 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.




இறுதியாக மாலை 5 மணி அளவில் 70.65 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. காலை 7 மணியிலிருந்து 12 மணி வரைக்கும் இருந்த விறுவிறுப்பு மாலையில் இல்லை. அதே நேரத்தில் மாலை 5 மணிக்கு மேல் பல வார்டுகளில் ,பல ஓட்டுச்சாவடிக்கு வாக்காளர்கள் படையெடுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பல வாக்குச்சாவடிகளில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது . இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். அதிமுக-திமுகவினரிடம் பல வார்டுகளில் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டது.


ஓட்டு கேட்பதில் ஒருவருக்கு ஒருவர் பிரச்சனை ஏற்பட்டது . எங்கும் அடிதடி கலவரம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் 28வது வார்டில் சிறிது நேரம் நடந்த மறியல் கைவிடப்பட்டது. அதனால் மாவட்டத்தில் 70 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாகவும் அமைதியாக தேர்தல் முடிந்ததுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார். இதில் திண்டுக்கல் மாநகராட்சியில் 63 சதவீதமும், கொடைக்கானல் நகராட்சியில் 70 சதவீதமும், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 65 சதவீதமும், பழனி நகராட்சியில் 65 சதவீதமும், 23பேரூராட்சிகளில் 70 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 70.65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.




திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டு கவுன்சிலர்கள் பதவிகளுக்கு மொத்தம் 275 பேர் போட்டியிட்டுள்ளனர். திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி எம்எல்ஏ கூட்டுறவுத் துறை அமைச்சரின் சொந்த ஊரான திண்டுக்கல்லில், மாநகராட்சியை திமுக கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையுடன் அமைச்சர் செயல்பட்டு வருகிறார். கூட்டுறவுத்துறை அமைச்சர் மருமகள் மற்றும் மகள் ஆகியோருக்கு சீட் வழங்குவார் என்று திமுக வட்டாரங்கள் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை அரசியலில் ஈடுபடாமல் தொழிலதிபராக இருந்து வந்த இந்திராணி என்பவருக்கு வாய்ப்பை வழங்கியுள்ளதாக வெளியான தகவலையடுத்து திண்டுக்கல் திமுகவினரிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.




ஆனால் மேயர் வேட்பாளர் தற்போது வரையில் இறுதி செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையே திண்டுக்கல் நகராட்சியின் முன்னாள் சேர்மன் உறவினர் 6 வார்டில் போட்டியிடும் சரண்யாவுக்கு மேயர் பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால் பல்வேறு கட்ட விமர்சனங்கள் மேயர் பதவிக்கு சீட் வழங்கப்படுவது குறித்து எழுந்து வந்தாலும் அதற்கான உடன்படிக்கை தற்போது வரை பேச்சுவார்த்தை நடந்த போதிலும் இறுதியான முடிவுகள் எட்டப்படாமல் இருந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறுப்படுகிறது. இதற்கிடையே திமுக, அதிமுக மூத்த அரசியல்வாதிகள் மட்டுமல்லாது சேகர் ரெட்டியின் உறவில் இருக்கும் கோடீஸ்வரர் சர்வேயர் ரத்தினம், 22 வயதான தனது இளைய மகன் வெங்கடேஷ் என்பவரை 17வது வார்டில் களமிறங்கியுள்ளார்.




எந்தக் கட்சி அதிக இடங்களை பிடிக்கிறதோ அதற்கேற்றவாறு துணை மேயர் பதவியை தனது மகனுக்கு வாங்கி கொடுத்துவிட வேண்டும் என்பது அவரின் திட்டமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. திண்டுக்கல் மாநகராட்சி மேயர் துணை மேயர் பதவிக்கான கடுமையான போட்டி நிலவி உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் உள்ளூரில் செல்வாக்காக உள்ளவர் வேட்பாளர் சார்ந்த சமூகமே இதை வைத்து வெற்றி தோல்வியை சொல்லிவிடக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒரே இடத்தில் சேர்க்க முடியாமல் போனதும் அதிமுக தனிப்பட்ட செல்வாக்கில் சிலர் வெற்றி பெற்றாலும் மாநகரை கைப்பற்றும் அளவுக்கு வலுவாக இல்லை தற்போதைய நிலையில் திண்டுக்கல்லில் திமுகவே முன்னிலையில் இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, ABPநாடு தளத்துடன் இணைந்திருக்கவும்