காஞ்சிபுரம் மாநகராட்சி 

 

ஆன்மீக ரீதியாக மட்டுமில்லாமல், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்ற நகரமாக காஞ்சிபுரம் நகரம் விளங்கி வருகிறது. அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரம் சுதந்திரத்திற்கு முன்பு 1921-ஆம் ஆண்டு 40 வார்டுகளுடன் நகராட்சி அந்தஸ்து பெற்றது. முதல் நகராட்சி தலைவராக ராவ் பகதூர் சம்மந்தர் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதுவரையில் 19 நபர்கள் நகர்மன்ற தலைவர்கள் பதவி வகித்துள்ளனர். காஞ்சிபுரம் நகராட்சி தலைவராக சாமிநாதர், சாம்பவ சிவம், சீனுவாசன் ஆகியோர் 2 முறை பதவி வகித்துள்ளனர்.

 

அதிமுகவை சேர்ந்த மைதிலி திருநாவுக்கரசு, திமுகவை சேர்ந்த சன் பிராண்ட் ஆறுமுகம், ராஜேந்திரன் ஆகியோரும் காஞ்சிபுரம் நகர்மன்றத் தலைவராக இருந்துள்ளனர். 


 

இதுவரை 19 நபர்கள் நகர்மன்ற தலைவராக இருந்தாலும் , அதிமுகவை சேர்ந்த மைதிலி திருநாவுக்கரசு மட்டும்தான் ஒரே பெண் நகர்மன்றத் தலைவராக இருந்துள்ளார். தற்பொழுது காஞ்சிபுரம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக அறிவித்துள்ள நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காஞ்சிபுரம் மாநகராட்சியை முதல் பெண் மேயர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 


 

 

அதிமுக வேட்பாளர் மர்ம மரணம்

 

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரம் மாநகராட்சியில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 1,05,668 பேர். பெண்கள் வாக்காளர்கள் 1,13,205 பேர். இதர வாக்காளர்கள் 28 பேர் என மொத்தம் 2,18,901 வாக்காளர்கள் உள்ளனர். அவற்றில் 50 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

 

காஞ்சிபுரம் மாநகராட்சியின் 36-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த வார்டில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  மொத்தம் 327 வேட்பாளர்கள் தேர்தலைச் சந்தித்தர்கள். மாநகராட்சியின் முதல் மேயர் என்பதால் இந்த தேர்தலில் கடுமையான போட்டி நிலவுகிறது.

 

வாக்குப்பதிவு

 

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 63.42% வாக்குகள் பதிவாகின. காஞ்சிபுரம் மாநகராட்சியை பொறுத்தவரை எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி சுமூகமான முறையில் தேர்தல் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக சார்பில் 40 வேட்பாளர்களும், அதன் கூட்டணிக் கட்சி சார்பில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். உதயசூரியன் சின்னம் 43 இடங்களில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 5 இடங்களில் போட்டியிடுகிறது. அதிமுக 49 இடங்களிலும்,  ஒரே இடத்தில் மட்டும் தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக சின்னத்தில் போட்டியிடுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி 39 இடங்களிலும், பாஜக 33 இடங்களிலும், நாம் தமிழர் கட்சி 35 இடங்களிலும், அமமுக 24 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 13 இடங்களிலும்,  போட்டியிடுகின்றது. தேமுதிக சார்பில் யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை. இது தவிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று இடங்களில் திமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுகிறது.

 



 

மேயர் பதவி வாய்ப்பு யாருக்கு?

 

காஞ்சிபுரம் நகர செயலர் சன்பிராண்ட் ஆறுமுகம் மகள் சசிகலா , மாநில வர்த்தக அணி துணைச் செயலராக உள்ள ராமகிருஷ்ணன் மனைவி மல்லிகா ,  திமுகவில் இணைந்த முன்னாள்  பாமக பிரமுகர் உலகரட்சகன் மருமகள்  சூர்யா,  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் மனைவி மகாலட்சுமி ஆகியோர் மேயர் பதவிக்காக மல்லுக்கு நிற்கிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை நகர செயலாக இருந்தவரும் வள்ளிநாயகம் மனைவி சுசீலாவிற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.