ஜெய் பீம் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். டி இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். சூர்யாவுடன் பிரியங்கா அருள் மோகன், வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, தேவதர்ஷினி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், இளவரசு, சுப்பு பஞ்சு உட்பட பலர் நடித்துள்ளனர். சூரரை போற்று, ஜெய் பீம், என சூர்யா தோல்விகளிலிருந்து மீண்டு வெற்றிப்பதையை அடைந்திருந்தாலும், இவை அனைத்து ஒடிடி-யில் வெளியான திரைப்படங்கள் ஆகும். சூர்யாவின் திரைப்படம் சில பல வருடங்களுக்கு பிறகு தியேட்டரில் வெளியாவதால், இந்த திரைப்படம் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. 



சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகிறது. தெலுங்கிலும் இந்த திரைப்படம் வெளியாவதால் இதற்கான செய்தியாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அந்த சந்திப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலுங்கு நடிகர் ராணா டகுபதி சூர்யா குறித்து ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். பாகுபலி திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ராணா டகுபதி. ஆஜான பாகுவான உடல் வாகில் அந்த படத்தில் பல்வாள்தேவனாக மிரட்டியிருப்பார். அவர் பேசுகையில், "10 வருடங்களுக்கு முன், சூர்யா ஒருமுறை என் படத்தின் எடிட்டிங் ஸ்டுடியோவுக்கு வந்து, 4 மணி நேரம் ஹைதராபாத் முழுவதும் என்னை காரில் ஏற்றிச் சென்றார். அப்போது, 'நான் எப்போதும் நடிப்பது இல்லை, அந்த கதாபாத்திரம் அந்த சூழ்நிலையில் இருப்பது போல மேனேஜ் செய்வேன்' என்று கூறினார். அவரது 4 மணிநேர வகுப்பு என்னை பல்வாள்தேவனாகவும், டேனியல் சேகராகவும் மற்றும் பல கதாபாத்திரங்களாகவும் உருவாக்கியது." என்று கூற அரங்கம் கைத்தட்டலால் அதிர்ந்தது. அவர் பேச பேச சூர்யா சிரித்துக்கொண்டு வந்து அவரை கட்டிப்பிடித்தார்.






அவர் கூறிய டேனியல் சேகர் என்னும் கதாபாத்திரம் சமீபத்தில் வெளியாகி தெலுங்கு சினிமாவில் பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்டு ஓடிக்கொண்டிருக்கும் பீம்லா நாயக் திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் ஆகும். இந்த திரைப்படம், மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் ரீமேக்காகும். இதில் பிருத்விராஜ் நடித்த கோஷி கதாபாத்திரத்தில்தான் ராணா நடித்திருந்தார். அய்யப்பனாக பிஜு மேனன் நடித்த கதாபாத்திரத்தில், பவன் கல்யாண் நடித்திருக்கிறார். சாகார் சந்திரா இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இதில் பவன் கல்யாண் ஜோடியாக நித்யா மேனன் மற்றும் ராணா ஜோடியாக சம்யுக்தா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி ராணாவின் தந்தையாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.