ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி நிறைவு பெற்ற, அதன் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், வேடர்கள் அணியின் மூளையாக இருந்து, முதல் ஜூரியாக வெளியேறிய நந்தா, தனது அனுபவத்தை இணையதளத்திற்கு பகிர்ந்துள்ளார். இதோ அவரது அந்த பேட்டி...
‛‛போட்டி தொடங்கியதும்ல வேடர்கள் தான் முதலில் தொடர்ந்து ஜெயித்தோம். விளையாட்டுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில், பெசண்ட் ரவி, லட்சுமி ப்ரியா, அம்ஜத் ஆகியோர் அப்போது உறுதியாக இருந்தனர். எங்க அணியில் இருந்து, நாங்கள் யாரையும் வெளியே அனுப்பவில்லை. ரவி, அவராக தான் உடல்நிலை காரணமாக வெளியே செல்ல விரும்பினார்.
ரவி வெளியேறியதை பற்றி அர்ஜூன் சார் என்னிடம் கேட்டார். ‛அவர் சென்றது எனக்கு பெரிய இழப்பு சார்... அவர் சென்றது ஆயிரம் யானை பலம் இழந்ததைப் போல உள்ளது சார்,’ என அர்ஜூன் சாரிடம் நான் கூறினேன். ஆனால் அது ஒளிபரப்பாகவில்லை. நாங்கள் யாரையும் வெளியேற்றவில்லை.
சரண், எங்கள் அணிக்கு வரும் போது, முதலில் என்னால் ஏற்க முடியவில்லை. சந்தர்ப்பம், சூழல் தான் தவறு செய்ய வைத்திருக்கிறது. அதை அவர் உணர்ந்த போது, அதை நான் ஏற்றுக்கொண்டேன். அரவணைத்து செல்ல வேண்டும் என முடிவு செய்தேன். அணிக்கு அவர் அர்ப்பணித்ததால், நெருக்கம் ஏற்பட்டது. ட்ரைபிள் பஞ்சாயத்தில், ஐஸ்வர்யாவும், சரணும் ஒன்றாக வெளியேறிய போது, எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பின்னர் நானும் அவர்கள் இருக்கும் மூன்றாம் உலகத்திற்கு சென்றேன். அங்கு இருந்த நாட்கள், எங்கள் 3 பேருக்கும் நல்ல நெருக்கம் கிடைத்தது. ஐஸ்வர்யா மீண்டும் போட்டிக்கு சென்ற பின், நானும் சரணும் ஒருவாரம் தனியாக இருந்தோம். அப்போது, சரணுடன் இன்னும் நெருக்கம் ஆனது.
அதன் பின் நான் ஜூரியாக வெளியேறிய பின், ட்ரைபிள் பஞ்சாயத்திற்கு போன போது, ஐஸ்வர்யாவும், சரணும் என்னை பார்க்கவே இல்லை. அப்போது தான், அவர்களுக்குள் புரிதல் இல்லாமல் போனது தெரிந்தது. அதன் பின் ஐஸ்வர்யா வெளியேறி வந்து விபரங்களை கூறினார். அப்போது எனக்கு வருத்தமாக இருந்தது. அதனால் அதை வைத்து சரணுக்கு நான் ஓட்டளித்தேன். சரணுக்காக ஐஸ்வர்யா அவ்வளவு சப்போர்ட் செய்தார். அவர் தவறே செய்திருந்தாலும், அவரை சரண் விட்டுக் கொடுத்திருக்க கூடாது.
உமாபதி-விஜயலட்சுமி இடையே என்ன நடந்தது என எனக்கு தெரியாது. உமாபதி, நல்ல பிளேயர். அவர் ஜெயித்திருக்கலாம். நல்ல மனநிலையில் அவர் பைனலில் விளையாடவில்லை. டாப் 3ல் அவர் வந்திருந்தால், போட்டி வேறு மாதிரி இருந்திருக்கும். காடர்கள் அணிக்கு உமாபதி தான் பில்லர். அவர் இல்லையென்றால், அவர்களின் வெற்றி சாத்தியம் இல்லை. ஒருவேளை உமாபதி இருந்திருந்தால், அவருக்கு தான் நான் ஓட்டளித்திருப்பேன்,’’ என, நந்தா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்