ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சி பல்வேறு திருப்பங்களுடன் ஒவ்வொரு நாளையும் கடத்தி வருகிறது. நேற்று நடந்த இம்யூனிட்டி டாஸ்கில் போராடி வெற்றி பெற்ற காடர்கள் அணி, கோழி, எண்ணெய் உள்ளிட்ட சமையலுக்கு தேவையான பொருட்களை பெற்றனர். ஒருநாள் விஜயமாக எதிரணியிலிருருந்து நந்தாவை அவர்கள் அழைத்துச் சென்றனர். அடுத்தடுத்து தோல்வியில் வேடர்கள் அணி சோர்ந்து போயுள்ளது. இந்நிலையில் பரபரப்பாக இன்றைய 19 எபிசோட் எப்படி இருந்தது என்று பார்ப்போம்....
கவலையில் ஐஸ்வர்யா...!
வேடர்கள் அணியில் இரவு நந்தா இல்லாமல் அணியினர் ஒன்று கூடி பயர் கேம்ப் போட்டு உரையாடினர். ஐஸ்வர்யா கவலையாக இருப்பதாக கூறினார். அவருக்காக லெட்சுமி ப்ரியா ‛தென்றல் வந்து தீண்டும் போது...’ பாடலை பாடினார். நந்தா இன்னும் வரவில்லை என விடிந்ததும் லெட்சுமி ப்ரியா-ஐஸ்வர்யா இருவரும் உரையாடினார். நந்தாவிற்கு பதிலாக வேறு நபரை அனுப்புவார்களோ என பேசிக்கொண்டனர். நந்தாவிற்கு பதில் விக்ராந்த் வருவார் என நினைக்கிறேன் என்றார் ஐஸ்வர்யா. எதுவும் நடக்கலாம் பார்க்கலாம் என்று அவர்களே சமாதானம் ஆகிக் கொண்டோம்.
நந்தா-ஐஸ்வர்யா காதல் வேவ்ஸ்!
அங்கு காடர்கள் அணியில் காபி போட்டு குடித்தனர். அதை கண்டதும் நந்தா உற்சாகமானார். இதையெல்லாம் பார்த்து பல நாள் ஆகியிடுச்சு, உங்களுக்காக ஒரு சின்ன பாடல் பாடுகிறேன் என்று ,‛கண்ணே கலை மானே பாடலை..’ பாடினார். முதல் நாள் இரவில் நந்தா இல்லாமல் இரவை கடத்த கவலையாக இருந்ததாக ஐஸ்வர்யா சொன்னதும், நந்தா பாடிய போது, ஐஸ்வர்யா கவலையாக இருப்பதாக காட்டியதும், அவர்களுக்குள் காதலா என்பதைப் போன்று காட்சிகள் இடம் பெற்றது. இது ஒன்று போதுமே... அவர்களுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறதோ.. என்று சிந்திக்கத் தோன்றுகிறது. அதற்கான லீடும் ஜீ தமிழே தந்தது.
தீவு திரும்பிய நந்தா!
வேடர்கள் அணிக்கு நந்தா மீண்டும் திரும்பினார். அவர் வந்ததும் லெட்சுமியும், ஐஸ்வர்யாவும் கட்டி அணைத்து வரவேற்றனர். அதன் பின் நந்தா வந்தபின் தான் ஐஸ்வர்யா முகத்தில் பல்பு எரிவதாக அம்ஜத் ஓட்டினார். அவரும் வெட்கத்தில் சிரித்தார். பின் டெண்டில் தனிமையில் நந்தாவும் ஐஸ்வர்யாவும் பேசினர். அப்போது ‛96’ பீஜியம் போட்டு காதலுக்கான அத்தனை அம்சத்தையும் ஜீ தமிழ் செய்ய, தான் பாடியது, பேசியது, நினைத்ததையெல்லாம் இருவரும் பகிர்ந்தனர். ஒரே காதல் வேவ்ஸ்...
மீண்டும் கட்டம் கட்டப்படும் ராம்!
இதற்கிடையில் காடர்கள் அணியில் ஒரு பாத்திரத்தை சுத்தம் செய்து கொண்டு வர ராம் தாமதம் செய்தார். ஒரு பாத்திரத்தை கழுவ 20 நிமிடமா என்று விஜயலட்சுமி கொந்தளித்தார். 5 நிமிடத்தில் முடிய வேண்டிய வேலைக்கு நேரமா என்று கடுப்பானார் விஜயலட்சுமி. நேரடியாக தன் அதிருப்தியை விஜயலட்சுமி ராமிடம் தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து கடலுக்கு பாத்திரத்தை வாங்கிச் சென்ற விஜயலட்சுமி, பாத்திரத்தை சுத்தம் செய்யத் தொடங்கினார். பின்னர் அணியினரிடம் ராம் செய்த தவறை சுட்டிக்காட்டி ஆவேசமானார். இதனால் காடர்கள் அணியில் மீண்டும் ராம் மீதான தாக்குதல் தொடங்கியது.
சிதறும் வேடர்கள் அணி!
இதற்கிடையில் வேடர்கள் அணியில் விஜயலட்சுமியை கூட்டணியில் சேர்க்க அம்ஜத் திட்டமிடுகிறார். அவரும் அதை விரும்புவதாக தெரிகிறது. மற்றொருபுறம் டாஸ்கில் அம்ஜத் பலவீனமாக இருக்கிறார் என நந்தா ஐஸ்வர்யாவுக்கு நினைவூட்டினார். அவர் பலவீனமாக உள்ளார் என்றும் தெரிவித்தார். வேடர்கள் அணியில் தற்போது ஒற்றுமை உடைந்து, கூட்டணி வியூகம் நடப்பது அப்பட்டமாக தெரிகிறது. மறுமுனையில் காடர்கள் அணியில் உமாபதியை அழைத்த ராம், ‛என்னை நீங்கள் அனைவரும் கேலியாக சித்தரிப்பதாகவும், விருந்தாளி நந்தா முன் கூட அவமதித்ததாக’ ராம் வேதனை தெரிவித்தார்.
ஒதுக்கும் காடர்கள் அணி!
ரெபிடேஷனை உடைக்க முயற்சிக்கிறார் என உமாபதி சக போட்டியாளர்களிடம் பற்ற வைக்க, வழக்கம் போல விக்ராந்த் தலைமையில் அணியினர் கூடி ராம் மீது குற்றச்சாட்டுகளை வைத்தனர். எச்சரித்தனர். கேப்டன் என்ற முறையில் உமாபதியிடம் கூறிய விவகாரத்தை குழுவிற்கு கொண்டு வந்து, கும்மியடித்தது உமாபதி. பின்னர் ஒரு கட்டத்தில் வழக்கம் போல ராம் மீது குறை இருப்பதாக கூறி விக்ராந்த் எழுந்தும் ஒட்டு மொத்த அணியும் பஞ்சாயத்து முடிந்ததாக அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது ராம் விரக்தியோடு வெளியேற, உமாபதி அவரிடம் சண்டை போடுவது போல நக்கலாக நேருக்கு நேர் சென்று பின்னர் கிண்டலாக திரும்பினார். மோதுவார்களோ என்கிற எண்ணம் ஒரு நொடி வந்து போனது.
வேடர்கள் அணியில் வில்லத்தனம்!
இதற்கிடையில் வேடர்கள் அணியில் நந்தாவும் ஐஸ்வர்யாவும், அம்ஜத்-லெட்சுமி ப்ரியா பலவீனமாக இருக்கிறார்கள். அவர்களை தான் அடுத்து பரிந்துரைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால் அம்ஜத்-லெட்சுமி ப்ரியா கூட்டணி வில்லத்தனமாக மாறுகிறது. குறிப்பாக லெட்சுமி ப்ரியா, தன்னிடம் நந்தா பேசியதை அப்படியே அம்ஜத்திடம் கூறி அணி பிளவுக்கு காரணமாகிறார். பின்னர் அணியினர் ஒன்று கூடி பேசுகிறார்கள். ஏன் டாஸ்க் செய்யும் போது தனிநபர் பாதுகாப்பை பேசுகிறீர்கள் என்றும், எலிமினேட் பற்றி பேசாமல் வெற்றியை பெற்றி பேசலாம் என்று நந்தா கூறினார்.
முரண்பாடு உள்ளது. ஆனாலும் அதை கடந்து எப்படி ஜெயிக்கப்போகிறார்கள். புதிய வரவும் இருப்பதாக தெரிகிறது. இப்படி பரபரப்பான சூழலில் நாளைய எபிசோட் இன்னும் விறுவிறுப்பாக இருக்கலாம்.