சுதா கொங்கரா - சூர்யா கூட்டணி


தேசிய விருது வென்ற சுதா கொங்காரா - சூர்யா கூட்டணி இரண்டாவது முறையாக இணையும் திரைப்படம் சூர்யா 43. சூரரைப் போற்று படத்தின் வெற்றியால் கோலிவுட்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் கூட்டணியாக இந்தக் கூட்டணி உருவாகி இருக்கிறது. தற்போது சூர்யா 43 படத்திற்காக லொக்கேஷன், நடிகர்கள் முடிவு செய்யப்பட்டு படப்பிடிப்புக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்தப் படத்தின் சூர்யாவின் கதாபாத்திரம் எப்படியானதாக இருக்கும் என்கிற தகவல்கள் கசிந்துள்ளது.


 நடிகர்கள்


சூர்யா 43 படத்தில் பாலிவுட் முதல் மலையாள சினிமா வரை பல்வேறு நடிகர்கள் நடிக்கவிருக்கிறார்களாம். மலையாள நடிகர் துல்கர் சல்மான் இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.


இதைத் தொடர்ந்து  நீண்ட நாட்கள் தமிழ் சினிமாவுக்கு ப்ரேக் விட்டிருந்த நடிகை நஸ்ரியா இந்தப் படத்தில் ரீ எண்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்ததாக பாலிவுட் நடிகர் விஜய் வர்மா இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க ஜி. வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படம் சூர்யா 43 என்பது குறிப்பிடத்தக்கது.


கல்லூரி மாணவனாக சூர்யா


சூர்யா கல்லூரி மாணவனாக நடித்த படங்கள் ரசிகர்களிடம் எப்போதும் தனி வரவேற்பைப் பெறக்கூடியவை. ஆயுத எழுத்தில் கோபக்கார அரசியல் ஆர்வம் கொண்ட ஒரு இளைஞனாக நடித்த சூர்யா, சில்லுனு ஒரு காதல் படத்தில் கெத்தான சீனியராக நடித்து அசத்தி இருந்தார். தற்போது சூர்யா 43 படத்தில் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் சூர்யா நடித்த அதே கதாபாத்திரத்தின் சாயலில் இருக்கும் என்றும், இந்தப் படத்திலும் சூர்யா அரசியல் ஆர்வம் கொண்ட ஒரு இளைஞனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


மேலும் சூரரைப் போற்று படத்தில் இளைஞனாக இருந்த சூர்யா, தன்னுடைய எடையைக் குறைத்ததை விட இந்தப் படத்தில் இன்னும் அதிக எடையை குறைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் படக்குழு சார்பாக விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.


கங்குவா


தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. வெற்றி இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.


ரோலக்ஸ்


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரோல்கஸ் கதாபாத்திரத்தை வைத்து தனியாக முழுநீளப் படம் ஒன்றை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக லோக்கி தெரிவித்திருந்தார். லியோ , தலைவர் 171 கைதி உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து ரோலக்ஸ் படத்தின் வேலைகள் தொடங்க இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.