கங்குவா


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் கங்குவா. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படம் சூர்யாவின் கரியரில் அதிக பொருட்செலவில் உருவான படமாகும். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. பாபி தியோல் , திஷா பதானி உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் படத்தில் நடித்துள்ளார்கள். வரும் நவம்பர் 14 ஆம் தேதி கங்குவா திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இப்படம் கூறித்து கூடுதலான பல சுவாரஸ்ய தகவல்களை கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 


எட்டு மொழிகளில் வெளியாகும் கங்குவா


கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு , இந்தி , மலையாளம் , ஆங்கிலம் ஃபிரெஞ்சு , ஸ்பானிஷ் என மொத்தம் எட்டு மொழிகளில் வெளியாக இருக்கிறதாம். அத்தனை மொழிகளிலும் சூர்யாவின் குரல் ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்டு வருகின்றன. வட மாநிலங்களில் மட்டும் இப்படம் 3500 ஸ்கிரீன்களில் வெளியாகும் என்றும் வெளிநாடுகளில் ரிலீஸ் பெரும் சாதனை படைக்கும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் படத்தை வெளியிடுவதற்கு ப்ரோமோஷன் செய்வதற்கும் அந்த நாட்டின் மார்கெட் நன்றாக தெரிந்த ஒருவரை தேர்வு செய்துள்ளது படக்குழு. இந்தியாவில் இப்படத்திற்கு மிக பிரம்மாண்டமான ப்ரோமோஷன்கள் நடைபெற இருக்கின்றன.


சூர்யாவுக்கு சிறப்பு டைட்டில் கார்ட்


படத்தில் சூர்யாவுக்கு ஒரு ஸ்பெஷலான டைட்டில் கார்டை இயக்குநர் சிறுத்தை சிவா உருவாக்கியுள்ளார். இன்னும் சில நாட்களில் படத்தின் புதிய டிரைலர் வெளியாகும் . முந்தைய டிரைலரில் வரலாற்று காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில் அடுத்து வரும் டிரைலரில் சூர்யாவின் இன்னொரு கெட் அப் காட்சிகள் வெளியாகும் என ஞானவேல் ராஜா கூறியுள்ளார். 


படத்தின் இறுதிகட்ட வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் 3D க்கு மாற்றப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கங்குவா திரைப்படம் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகுமா என்கிற கேள்வி இருந்த நிலையில் ஐமேக்ஸ் திரைகளில் படம் வெளியாகாது என ஞானவேல் ராஜா உறுதிபடுத்தியுள்ளார். கங்குவா திரைப்படத்தை ஒரு மிகப்பெரிய பான் இந்திய வெற்றிப்படமாக மாற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் படக்குழு எடுத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யா படத்தை திரையரங்கில் பார்க்காமல் காத்து கிடந்த ரசிகரகளுக்கு ஒரு பிரம்மாண்டமான அனுபவமாக கங்குவா இருக்கும் என நம்பலாம்