கடந்த வியாழக்கிழமை மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இரண்டு அக்னி வீரர்கள் பயிற்சியின் போது எதிர்பாராத சம்பவத்தினால் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு பயிற்சியின் போது வியாழக்கிழமை மதியம் 12.10 மணியளவில் துப்பாக்கி குண்டு வெடித்ததில் இந்திய இராணுவத்தின் இரண்டு பயிற்சி அக்னி வீரர்கள் இறந்தனர் மற்றும் அவர்களின் பயிற்றுவிப்பாளர், ராணுவ ஹவில்தார் காயமடைந்தார். 
 
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , மத்திய அரசை கடுமையாக விமர்சித்து அக்னி வீரர் திட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 
 
அவர் தெரிவித்ததாவது “ நாசிக்கில் பயிற்சியின் போது இரண்டு அக்னி வீரர்களான கோஹில் விஸ்வராஜ் சிங் மற்றும் சைபத் ஷிட் ஆகியோர் உயிரிழந்திருப்பது சோகமான சம்பவமாகும். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
1.இந்த துயரச்சம்பவமானது, அக்னிவீர் திட்டம் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்புகிறது. இறந்த அக்னி வீரர்களின் குடும்பங்களுக்கு ,  வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு வழங்கும் இழப்பீட்டிற்கு இணையான இழப்பீடு சரியான நேரத்தில் கிடைக்குமா?
 
2.அக்னிவீரர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற அரசு வசதிகள் ஏன் கிடைப்பதில்லை? ராணுவ வீரர்களை போன்றுதான் அக்னிவீரர்களின் பொறுப்பும் தியாகமும் ஒரே மாதிரியாக இருக்கும்போது, அவர்கள் தியாகம் செய்த பிறகு ஏன் இந்தப் பாகுபாடு?


3. ஒரு ராணுவ வீரரின் உயிரை விட மற்றொரு ராணுவ வீரரின் உயிர் ஏன் விலை உயர்ந்தது என்பதற்கு              பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் பதில் சொல்ல வேண்டும்?
 
அக்னிபத் திட்டம், ராணுவத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் நமது வீர வீராங்கனைகளின் தியாகத்தை அவமதிக்கும் செயல். இந்த அநீதிக்கு எதிராக ஒன்றுபடுவோம். பாஜக அரசின் 'அக்னிவீர்' திட்டத்தை நீக்கி, நாட்டின் இளைஞர்கள் மற்றும் ராணுவத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இன்றே நமது 'ஜெய் ஜவான்' இயக்கத்தில் இணையுங்கள் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.