Amazon Prime ஓடிடி தளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய திரைப்படம் ‘ஜெய் பீம்.  சமூக வலைத்தளங்களில் ‘டாக் ஆஃப் தி டவுனாக’ மாறிய ஜெய்பீம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆனாலும் படம் தொடர்பான பரபரப்பு இன்றும் குறையவில்லை. தற்போது ஜெய்பீம் வைத்திருக்கும் குறி ஆஸ்கர் மீது. 


ஆஸ்கர் விழா..


2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விழா மார்ச் மார்ச் 31ம் தேதி நடைபெறவுள்ளது. 10 பிரிவுகளின் கீழ் ஏற்கெனவே படங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதன் இறுதிப்பட்டியல் நாளை வெளியாகவுள்ளது.  இந்த இறுதிப்பட்டியல் மீதான ஓட்டுப்பதிவு மார்ச் 17 -22ம் தேதி வரை நடைபெறும்.  ஓட்டெடுப்பின் அடிப்படையில் இறுதி செய்யப்படும் படங்களின் பெயர் அறிவிக்கப்பட்டு அதில் இருந்து ஆஸ்கர் விருது வழங்கப்படும். ஏற்கெனவே பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் பட்டியலில் ஜெய்பீம் படமும், மலையாளப்படமான மரைக்காயரும் இடம்பெற்றுள்ளது.





ஜாக்குலின் கோலே..


இறுதிப்பட்டியல் நாளை வெளியாகவுள்ள நிலையில் இன்று ஆஸ்கர் கமிட்டி சார்பில் ட்விட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடல் நடைபெற்றது.  அதனை ஜாக்குலின் கோலே என்பவர் தொகுத்து வழங்கினார். இவர் அமெரிக்காவின் முக்கிய டொமேட்டோஸ் இணையதளத்தின் எடிட்டர் ஆவார். இந்நிலையில் ட்விட்டர் ஸ்பேஸில் ஆஸ்கர் இறுதிப்போட்டிக்கு செல்லும் படங்களில் கவனிக்கத்தக்கது ஏதேனும் உண்டா என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்க, அதற்கு பதிலளித்த ஜாக்குலின், சிறந்த படத்துக்காக ஜெய்பீம் செல்லும். என்னை நம்புங்கள் என்று பதிலளித்தார். அவரின் இந்த பதிவு ட்விட்டரில் வைரலானது. ஜாக்குலினே சொல்லிவிட்டார். கண்டிப்பாக ஜெய்பீம் ஆஸ்கர் இறுதிப்போட்டிக்கு செல்லும் என பலரும் பதிவிட்டனர்.






சர்ச்சையில் சிக்கிய ட்வீட்..


ஜாக்குலினின் ட்வீட் ஒருபுறம்  ஜெய்பீம் ரசிகர்களை குஷிப்படுத்தினாலும் சர்ச்சையிலும் சிக்கியது. இறுதிப்பட்டியல் வெளியாவதற்கு முன்பே ஜாக்குலின் இவ்வளவு உறுதியாக கூறுவது எப்படி என பலரும் கேள்வி எழுப்பினர். அப்படியானால் ஓட்டெடுப்பு எல்லாம் கண் துடைப்பா என பலரும் பதிவிட்டனர்


ஜாக்குலினின் விளக்கம்...


ட்விட்டர் சர்ச்சையில் சிக்கியதால் விளக்கம் அளித்த ஜாக்குலின், ஜெய்பீம் ரசிகர்களே.. அந்தப்படம் எனக்கு பிடித்திருந்தது. இறுதிப்போட்டிக்கு செல்லுமா செல்லாதா என்பது எனக்கு தெரியாது.  எந்த ஐடியாவும் எனக்கு இல்லை. அப்படி சென்றால் சந்தோஷம்தான்.. உள்ளே என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது. அது தொடர்பான தகவல்கள் எனக்கு இல்லை. உங்கள் அன்புக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.






இந்நிலையில் ஜெய்பீம் படத்துக்கு வாழ்த்துகள் தெரிவித்து ட்விட்டரில் பலரும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.