ஜெய் பீம்


த. செ.ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், சூர்யா நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது.


கதை


பட்டியலினப் பிரிவினுள் வரும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்கிறவர் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் நகையை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு காவல் துறையினரால் அடித்துக் கொல்லப் படுகிறார். மேலும் ராஜாகண்ணுவுடன் சேர்ந்து அவரது குடும்பத்தினர் அனைவரும் காவல்துறையால் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.


ராஜாகண்ணுவின் மனைவி செங்கேணி தன்னுடைய கணவரின் இறப்புக்கு நியாயம் கேட்டு நீதிமன்றத்தில் போராடி தன்னுடைய கணவர் நிரபராதி என்பதை நிரூபிப்பதே ஜெய் பீம் படத்தின் கதை. செங்கேணியின் சட்டப் போராட்டத்திற்கு ஆதரவாக அவருக்காக நீதிமன்றத்தில் இந்த வழக்கை வாதாடுகிறார் சந்துரு ( சூர்யா) . ஓய்வுப் பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது ஜெய்பீம் திரைப்படம். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். சூர்யாவின் 2D நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது.


சூர்யாவுக்கு குவிந்த பாராட்டுக்கள்


ஜெய் பீம் படம் வெகுஜன மக்களால் பாராட்டப்பட்டது மட்டுமில்லாமல் வெற்றியும் பெற்றது. இதற்கு மிக முக்கியமான காரணமாகக் கருதப்பட்டவர் நடிகர் சூர்யா. சூர்யா மாதிரியான ஒரு மிகப்பெரிய நடிகரின் பங்களிப்பு இந்தப் படத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்தது.


 மறுக்கப்பட்ட தேசிய விருது





2021 ஆண்டுக்கான தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டபோது ஜெய் பீம் படத்துக்கு எந்தப் பிரிவின் கீழும் விருது அறிவிக்கப்படாதது மிகப்பெரிய எதிர்ப்பலையை உருவாக்கி இருந்தது. ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் இந்தப் படத்துக்கு விருது வழங்காதது திட்டமிட்ட ஒரு முடிவு என்று இணையதளத்தில் பதிவிட்டனர்.


மக்கள் கொடுத்த விருது






தற்போது ஜெய் பீம் படத்தில் இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த வீடியோவை பார்ர்கும் ரசிகர்கள் தேசிய விருது வெல்வதற்கான அத்தனை தகுதிகளும் இந்த படத்திற்கு இருப்பதாகக் கூறியுள்ளார்கள்.