கங்குவா படத்தின் க்ளிம்ஸ் வீடியோ நாளை வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம்  ‘கங்குவா’.


அப்டேட் தந்த ஸ்டுடியோ க்ரீன்


இப்படத்தின் படப்பிடிப்பு  கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழு பகிர்ந்துள்ளது.


அதன்படி கங்குவா படத்தின் க்ளிம்ஸ் வீடியோ குறித்த அப்டேட் நாளை வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் பகிர்ந்துள்ளது. நாளை காலை 11 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகும் என ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


 






சரித்திரப் பின்னணியில் 13 கதாபாத்திரங்கள்


இதுவரை இப்படத்தில் நடிகர் சூர்யாவின் கெட் அப் ஃபோட்டோவை கூட முழுமையாக பகிராமல் படக்குழு அமைதி காத்து வந்துள்ள நிலையில், சூர்யாவின் பிறந்தநாளான வரும் ஜூலை 23ஆம் தேதி அவரது முழுமையாக தோற்றம் வெளியிடப்படலாம் என ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


சூர்யாவின் 42ஆவது படமாக உருவாகும் இப்படம் சரித்திரப் பின்னணியில் தயாராவதாகவும் ,இதுவரை இல்லாத வகையில் இப்படத்தில் சூர்யா 13 கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும்  இப்படத்தின் படப்பிடிப்பு, முன்னதாக  கோவா, பிஜூ தீவுகள், எண்ணூர் துறைமுகம், கேரளா, கொடைக்கானல், சென்னை  உள்ளிட்ட பகுதிகளில்  நடைபெற்று வந்தது.


சூர்யாவின் 42ஆவது படமான கங்குவா படத்தின் தலைப்பு, கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ப்ரோமோ சூர்யா பிறந்தநாள் அன்று வெளியாகும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி இன்று இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


அடுத்த ஆண்டு ரிலீஸ்


முன்னதாக சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் கங்குவா படத்தின் பாடல் காட்சி பிரம்மாண்டமான வகையில் படம் பிடிக்கப்பட்டதாகவும், 2,000 நடனக்கலைஞர்கள் இப்பாடலுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. 


முன்னதாக அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம், 80 கோடி ரூபாய்க்கு கங்குவா படத்தின் தென்னிந்திய டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியது. இந்நிலையில், அடுத்த ஆண்டு கோடை ஸ்பெஷலாக கங்குவா படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 மேலும் படிக்க: Entertainment Headlines July 19: இணையத்தைக் கலக்கும் பிரபாஸ்...லால் சலாம் நடிகைக்கு சிறை தண்டனை... இன்றைய டாப் சினிமா செய்திகள்!