கங்குவா இசை வெளியீடு


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கங்குவா படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கியது. சூர்யா நடிப்பில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் படம் வெளியாகாத நிலையில் சூர்யா ரசிகர்கள் இந்த படத்திற்காக மிக ஆவலாக காத்திருக்கிறார்கள். அதே போல் சூர்யா இன்று நிகழ்ச்சியில் பேசுவதை கேட்கவும் ரசிகர்கள் அரங்கத்தில் காத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா , இயக்குநர் சிவா , நடிகர் பாபி தியோல் , மதன் கார்க்கி , நடிகர் சிவகுமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி இப்படி கூறினார்


கங்குவா செவன் சாமுராய் மாதிரியான படம்


நான் திரைப்பட கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது கிளாடியேட்டார் , ப்ரேவ் ஹார்ட் , செவன் சாமுராய் மாதிரியான படங்களைப் பார்த்து இந்த மாதிரியான படங்களில் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அப்படியான ஒரு ஆசையை நிறைவேற்றும் வகையில் கங்குவா படம் அமைந்துள்ளது. உலக சினிமா தரத்தில் திரைப்படம் இயக்க வேண்டும் என்கிற இயக்குநர் சிவாவின் கனவு இந்த படத்தின் மூலம் நிஜமாகியுள்ளது. நிச்சயமாக இந்த படம் அவருக்கு நிறைய விருதுகளைப் பெற்றுத் தரும். இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என வெற்றி தெரிவித்துள்ளார்


ஜப்பானிய இயக்குநர் அகிரா குரசோவா இயக்கத்தில் 1954 ஆண்டு வெளியான படம் செவன் சாமுராய். இப்படத்துடன் ஒப்பிட்டு ஒளிப்பதிவாளர் வெற்றி பேசியுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது