தர்மம் என்பது இந்திய கலாச்சாரத்தின் மிக அடிப்படையான கருத்தாகும் என்றும் இது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் வழிநடத்துகிறது என குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சுவர்ண பாரதி மஹோத்சவத்தின் ஒரு பகுதியாக சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஏற்பாடு செய்திருந்த 'நம சிவாய' பாராயணத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், "மனிதகுலத்தின் மிகப் பழமையான, தொடர்ச்சியான வாய்மொழி மரபுகளில் ஒன்றான வேத நாமஜபம், நமது மூதாதையரின் ஆழ்ந்த ஆன்மீக ஞானத்துடன் வாழும் இணைப்பாக செயல்படுகிறது" என்று கூறினார்.


"மந்திரம் சொன்னால் மன அமைதி வரும்"


இந்தப் புனித மந்திரங்களில் உள்ள துல்லியமான தாளங்களும் உச்சரிப்புகளும் மன அமைதி மற்றும்  நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் சக்திவாய்ந்த அதிர்வுகளை உருவாக்குகின்றன என அவர் கூறினார்.


வேத மந்திரங்களில் முறையான கட்டமைப்பு மற்றும் சிக்கலான பாராயண விதிகள் பண்டைய அறிஞர்களின் அறிவியல் நுட்பத்தை பிரதிபலிக்கின்றன என்று அவர் மேலும் கூறினார். எழுதப்பட்ட பதிவுகள் இல்லாமல் பாதுகாக்கப்பட்ட இந்தப் பாரம்பரியம், ஒவ்வொரு அசையையும் கணித ஒத்திசைவில் உன்னிப்பாக உச்சரிப்பதன் மூலம், தலைமுறை தலைமுறையாக அறிவை வாய்வழியாக கடத்துவதற்கான இந்திய கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க திறனை நிரூபிக்கிறது என அவர் தெரிவித்தார்.


காலப்போக்கில் பல்வேறு பாரம்பரியங்களின் கலவையின் மூலம் உருவாக்கப்பட்ட வேற்றுமையில் ஒற்றுமையே இந்திய கலாச்சாரத்தின் வரையறுக்கும் அம்சம் என்று குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார். இந்தப் பயணம் பணிவு மற்றும் அகிம்சை போன்ற மதிப்புகளை விதைத்துள்ளது. 


சனாதனம் குறித்து பேசிய குடியரசுத் துணைத் தலைவர்:


இது "வசுதைவ குடும்பகம்" தத்துவத்தில் பொதிந்துள்ளது. இந்து மதம், சீக்கியம், சமணம் மற்றும் பௌத்தம் போன்ற முக்கிய மதங்களின் பிறப்பிடமே இந்தியா என அவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் நமது கலாச்சாரத்தைச் சீரழிக்கவும், நமது கலாச்சாரத்தை கறைபடுத்தவும், களங்கப்படுத்தவும், நமது கலாச்சாரத்தை அழிக்கவும் மதவெறி மேற்கொண்ட முயற்சிகளை நினைவுகூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர், நமது கலாச்சாரத்தை அழிக்க முடியாததால் நாடு பிழைத்துள்ளது என்று கூறினார்.


எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய போதனைகள் மூலம் இந்திய கலாச்சாரத்தை ஒன்றிணைத்து வலுப்படுத்துவதில் ஆதி சங்கராச்சாரியாரின் பங்கை எடுத்துரைத்த தன்கர், இந்திய ஆன்மீகம் மற்றும் தத்துவத்தின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தை மீட்டெடுத்த ஆதி சங்கராச்சாரியாருக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.


அனுதாபம், இரக்கம், சகிப்புத்தன்மை, அகிம்சை, நல்லொழுக்கம், மேன்மை, சமய உணர்வு ஆகியவற்றையே சனாதனம் குறிக்கிறது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.