சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது, கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தினை செயல்படுத்த முன்னுரிமை அளிக்குமாறு மத்திய அமைச்சரிடம் தமிழக முதல்வர் கேட்டு கொண்டார்.


தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர்  மனோகர் லால் ஆகியோர் இன்று சென்னை, நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆய்வு செய்தார்கள்.


மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள்:


இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், "முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அரசால் 2007-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அப்போதைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 2009-ஆம் ஆண்டு ஜுன் மாதம் பணிகள் தொடங்கப்பட்ட 54.1 கி.மீ நீளத்திலான சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-1 இன் இரண்டு வழித்தடங்களில் முழுமையாக பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகின்றன.


இந்தத் திட்டத்தின் கீழ் நாளொன்றிற்கு சராசரியாக 3.1 இலட்சத்திற்கும் மேல் பயணம் செய்து வருகின்றார்கள். 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் -11க்கு மத்திய அரசு பங்களிப்பினை அளிப்பதற்கான ஒப்புதலை தற்போது வழங்கியுள்ளது.


சென்னை மாநகரின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் முதுகெலும்பாக விளங்கும் மெட்ரோ இரயில் போக்குவரத்தின் இரண்டாம் கட்டமும் செயல்பாட்டிற்கு வரும் நிலையில், மொத்தம் 172 கி.மீ மெட்ரோ ரயில் கட்டமைப்பாக இருக்கும்.


கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் எப்போது மெட்ரோ?


சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் -11 இன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப்பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டார்கள்.


சென்னை புறநகர் ஒட்டிய முக்கிய பகுதியான விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான வழித்தடத்திற்கும் மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான செயற்குறிப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்குமாறு மத்திய அமைச்சரிடம் கேட்டு கொள்ளப்பட்டது.


இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முருகானந்தம். இ.ஆ.ப., மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டி. தாரா. இ.ஆ.ப., சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர் ஹர் சஹாய் மீனா, இ.ஆ.ப. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், இ.ஆ.ப, ஆகியோர் கலந்து கொண்டனர்.