தனது பிறந்தநாளுக்கு பேனர் வைக்க முயன்ற 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சூர்யா நேற்று தந்து 48வது பிறந்தநாளை கொண்டாடினர். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள சூர்யாவின் ரசிகர்கள் நேற்று பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டனர். அதன்படி , அன்னதானம், இரத்ததானம், கல்வி உபகரணங்கள் வழங்குவது, பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பது போன்ற நிகழ்வுகள் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இப்படியான நிலையில், ரசிகர்கள் போஸ்டர், பேனர், அவர் நடித்த படத்தின் ரீ- ரிலீஸ் என சூர்யா பிறந்தநாள் அமர்க்களமாக கொண்டாடப்பட்டது. இப்படியான நிலையில் ஆந்திராவில் சூர்யா பிறந்தநாளுக்கு பேனர் வைக்க முயன்ற 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் நாசராவ் பேட்டையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கல்லூரியில் படிக்கும் வெங்கடேஷ், சாய் ஆகிய இருவரும் தான் பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், நடிகர் சூர்யா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். வீடியோ கால் மூலம் பேசிய அவர், " நான் இன்னும் மீள முடியாத அதிர்ச்சியில் தான் இருக்கிறேன் " என்று கூறுகிறார். மேலும் உங்கள் குடும்பத்திற்கு ஒரு சகோதரனாக இருப்பேன் என்றும் ஆறுதல் கூறும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினர் அழுதுக்கொண்டே இருப்பதால் அந்த வீடியோவில் சூர்யா பேசும் பெரும்பாலான வார்த்தைகள் சரியாக கேட்கவில்லை. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சூர்யாவின் அடுத்தப்பட அப்டேட்
இதற்கிடையில் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக நடிகர் சூர்யா 10க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடிக்கும் கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. மிரட்டும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் வெளியான வீடியோ திரையுலகினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் குதிரையில் வரும் சூர்யா கையில் வாளுடன் ஒரு போர் வீரனைப் போல இடம் பெற்ற காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.