மணிப்பூரில் நடந்து வரும் மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. குறிப்பாக, பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் வீடியோவாக வெளியாகி மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு மாதங்களாக மணிப்பூர் இனக்கலவரம் குறித்து வாய் திறக்காத பிரதமர் மோடி, கூட, இதை கடுமையாக கண்டித்துள்ளார்.


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா என பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். மணிப்பூர் விவகாரம், நாடாளுமன்றத்தில் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.


நாடாளுமன்ற முடக்கத்திற்கு காரணம் என்ன?


கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நடத்த விடாமல் எதிர்க்கட்சியினர் முடக்கி வருகின்றனர். மணிப்பூர் தொடர்பாக விவாதிக்க 15 எம்பிக்கள் ஒத்தவைப்பு நோட்டீஸ் அளித்தனர். இதை தொடர்ந்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "முக்கியமான விஷயம் குறித்து பேசுவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது" என்றார்.


ஆனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


அதேபோல, விதி எண் 267இன் கீழ் அனைத்து அவை நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துவிட்டு நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், விதி எண் 176இன் கீழ் குறுகிய கால விவாதத்திற்கு மத்திய அரசு சம்மதித்துள்ளது.


அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் மணிப்பூர் விவகாரம்:


இதனால், வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை என இரண்டு நாள்களுமே நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், இன்றும் அதே பிரச்னை எதிரொலித்தது. இதற்கிடையே பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


விவாதத்தை நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், "இந்த முக்கியமான விஷயத்தில் உண்மை நிலையை நாடு தெரிந்து கொள்வது அவசியம்" என்றார். இருப்பினும், எதிர்க்கட்சியினரின் கடும் அமளி தொடர்ந்ததால், மக்களவையும் மாநிலங்களவையும் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மாநிலங்களவை தலைவர் இருக்கைக்கு அருகே உள்ள மைய பகுதிக்கு எகிரி குதித்து வந்து, முழக்கங்களை எழுப்பியதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதிலிமிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 


முன்னதாக, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி அளித்த பாஜக, "எதிர்க்கட்சிகள் ஆளும் ராஜஸ்தான், மேற்கு வங்கம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் விவாதிக்கப்பட வேண்டும்" என தெரிவித்தது.