தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது வெளியாக தயாராக உள்ளது 'கங்குவா' திரைப்படம். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக மிகவும் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கும் 'கங்குவா' படம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் :
அதன் தொடர்ச்சியாக நடிகர் சூர்யா - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வருகிறது. முதல் முறையாக இவர்கள் கூட்டணி சேரும் இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 44' என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் தீவில் முடிவடைந்துவிட்டது.
நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.
கிளிம்ப்ஸ் வீடியோ :
நடிகர் சூர்யா ரெட்ரோ லுக் இது ஒரு கேங்ஸ்டர் படம் என்பதை உறுதி செய்கிறது. இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூர்யா 44' படத்தில் கிளிம்ப்ஸ் வீடியோவை சரியாக நள்ளிரவு 12:12 மணிக்கு வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டது படக்குழு. இந்த வீடியோவுக்கு 'தி ஒன்' என தலைப்பிடப்பட்டுள்ளது. காதல், காமெடி, ஆக்ஷன் கலந்த படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைவரும் சூர்யாவுக்காக காத்திருக்க படு மாஸாக சிகரெட் புகைத்தபடி மிகவும் ஸ்டைலாக கேங்ஸ்டர் லுக்கில் சூர்யா நடந்து வருவது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
விரைவில் 'சூர்யா 44' படத்தின் டைட்டில் மற்றும் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.