கிருஷ்ணகிரி அணை கட்ட ஏராளமான விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தை அரசுக்கு வழங்கியுள்ளனர். இந்த நிலையில் அணை கட்ட நிலம் வழங்கியவர்களுக்கு, அரசு நிலம் வழங்கியுள்ளது.
இதனால் அரசு ஒதுக்கிய நிலத்துக்கு தற்போது வரை பட்டா வழங்கப்படவில்லை. இதனால் தங்களுக்கு அரசு வழங்கிய இடத்திற்கு பட்டா வழங்க கோரி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமையில் தர்மபுரி மாவட்ட வன அலுவலகத்தில் விவசாயிகளுடன் மனு கொடுத்தனர்.
இந்த மனுவில், கிருஷ்ணகிரியில் கடந்த கடந்த 1952ல், காமராஜர் ஆட்சியில், கேஆர்பி அணை கட்டப்பட்டது. இந்த அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட, பல்வேறு பகுதிகளில் அப்போதைய அரசு, நிலம் வழங்கி விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் தலா, மூன்று ஏக்கர் நிலம் வழங்கியது. இதில், தர்மபுரி அடுத்த பிக்கனஹள்ளி மற்றும் அதை ஒட்டி பகுதிகளில், 300 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டது.
இதையடுத்து கரடு முரடான இந்த பகுதியை விவசாயிகள் செம்மை படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். கேஆர்பி அணைக்கு விவசாயிகள் நிலம் வழங்கியதால் இன்று, பல ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசன வசதி பெற்று வருகிறது. இதனால், விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
ஆனால், கேஆர்பி அணைக்கு நிலம் வழங்கி மாற்று இடம் பெற்ற பிக்கனஹள்ளி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு, 72 ஆண்டுகள் ஆன நிலையிலும், இதுவரை பட்டா வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. தற்போது, இந்த நிலத்துக்கு வனத் துறையினர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்த பகுதிகளில் தற்போது, கேஆர்பி அணைக்கு நிலம் வழங்கியவர்களின் குடும்பத்தினர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கேஆர்பி அணைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், கேஆர்பி அணைக்கு நிலம் வழங்கி, தர்மபுரி மாவட்டத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டவர்களுக்கு, அதிகாரிகள் இதுவரை பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால், இந்த பகுதியில் வீடு, மின் இணைப்பு, சாலை வசதி இருந்த போதும், வனத் துறையினர் கெடுபிடியால் சேதமான சாலையை, பொதுமக்கள் சீரமைக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட வன அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல விவசாயிகள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட கேஆர்பி அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள், தங்களுக்கு அரசு வழங்கிய மாற்று இடத்துக்கு இதுவரை பட்டா பெறமுடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதை தடுக்க தமிழக அரசு கேஆர்பி அணைக்கு நிலம் வழங்கிய அனைவருக்கும் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், பாலக்கோடு பகுதியில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்க தலைவர் ராம கவுண்டர் தெரிவித்தார்.