நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஷங்கர் மெகா பட்ஜெட் படம் ஒன்றில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இயக்குநர்களை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில் தற்போது கதைகளுக்காக கதை ஆசிரியர்களை நாடிச்செல்லும் ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அடுத்ததாக மக்கள் அதிகமாக எதிர்பார்த்து கொண்டிருக்கும்   ‘பொன்னியின் செல்வன்’,  ‘வெந்து தணிந்தது காடு’  ‘விடுதலை’ ஆகிய மூன்று படங்களுமே கதையாசிரியர்களின் உதவியோடு எழுதப்பட்ட கதைகளே.


 






இந்த நிலையில் இந்த வரிசையில் அடுத்த அப்டேட்டாக எழுத்தாளர்  சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலும் படமாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தத்தகவலின் படி, வேள்பாரி நாவலை பிரமாண்டத்திற்கு பேர் போன இயக்குநரான இயக்குநர் ஷங்கர் இயக்க இருப்பதாகவும், இதில் பிரபல நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




வேள்பாரி நாவலானது மன்னன் பாரி ஆண்ட பரம்பு மீது, சேர, சோழ பாண்டியன் மன்னர்கள் ஏன் போர் தொடுத்தார்கள் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதே. இந்தக்கதையை படத்திற்கு ஏற்றவாறு மாற்றுவதற்கான வேலைகளில் சு.வெங்கடேசன் இறங்கியுள்ளதாகவும், இந்தப்படம் 1000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக விருமன் இசை மற்றும் வெளியீட்டு விழாவில் சூர்யா, தானும் சு.வெங்கடேசனும் படம் ஒன்றில் இணைய இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


 






சூர்யா தற்போது வணங்கான், வாடிவாசல், சூர்யா 42  ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குநர் ஷங்கர் ஆர்.சி 15 மற்றும் இந்தியன் 2 படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படங்கள் முடிந்த பிறகு இருவரும் இணைய இருப்பதாக தெரிகிறது.